முச்சந்தி

கனடாவிற்கு முழுக் குடும்பத்தையும் அனுப்புவதாகக் தெரிவித்து ஒரு கோடியே 58 லட்சம் ரூபா மோசடி;  அரசியல் பிரமுகரின் மனைவிக்கு விளக்கமறியல்

கனடாவிற்கு முழு குடும்பத்தையும் அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளரின் மனைவியான 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயை விளக்க மறியலில் வைக்குமாறு வரக்காபொல நீதவான் மினோலி பி. ரத்நாயக்க உதரவிட்டுள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த முறைப்பாட்டாளருக்கும், குறித்த அரசியல் பிரமுகருக்கும் இடையே 2008ஆம் ஆண்டு கொரியாவில் பணியாற்றிய காலத்திலிருந்தே நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் இலங்கை திரும்பிய பின்னர், 2024ஆம் ஆண்டு குறித்த அரசியல் பிரமுகர் கனடா சென்றுள்ளார்.

கனடாவில் இருந்து தனது நண்பரைத் தொடர்பு கொண்ட அவர், நண்பரின் முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும், அதற்கு 12 மில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் பிரமுகரின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட நபர் தம்புள்ளை பகுதியில் அரசியல் பிரமுகரின் மனைவி நடத்தி வந்த தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்குப் பல கட்டங்களாகப் பணத்தை அனுப்பியுள்ளார்.

மொத்தமாக 1.58 கோடி ரூபாவரை பணம் செலுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் கனடா செல்வது குறித்து முறையான தகவல்கள் கிடைக்காததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், கடந்த டிசம்பர் 18ஆம் திகதி கேகாலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *