800 மில்லியன் ரூபா நிதி மோசடி: அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 2017 – 2018 காலப்பகுதியில் 800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை விளைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதையடுத்து, இரு பிரதிவாதிகளும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து மேல் நீதிமன்றத் உத்தரவிட்டது.
2017ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக கொள்முதல் நடைமுறைகளின் கீழ் கோரப்பட்டிருந்த 3 நீண்டகால கொள்முதலை தன்னிச்சையாக இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையில் சுமார் 27 ஸ்தல கொள்முதல்களை செயற்படுத்தியமையே பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.
இவ்வாறு கொள்முதல் நடைமுறைகளை மீறியமை மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை ஊடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை விளைவித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான பூரண வழக்கு விசாரணையின் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி இடம்பெறும் எனவும் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. Reference
![]()