உலகம்

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்: அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை

ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போதிலும், மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. ட்ரம்ப்பின் அறிவிப்பை ஒரு “உளவியல் போர்” என வர்ணித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களில் ஜெருசலேம் மற்றும் தெஹ்ரான் வான்பரப்பில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

வடக்கு இஸ்ரேலில் செய்தியாளர் சந்திப்பில் இருந்த ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் (Isaac Herzog), அருகில் ஏவுகணை வீழ்ந்ததால் பதுங்குக்குழிக்குள் தஞ்சமடைந்தார். இதற்குப் பதிலடியாக, ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு தளங்கள் மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், ஈரானிய புரட்சிகர காவற்படை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதியிலுள்ள அமெரிக்க வான் தளங்கள் மீது பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

“ஹோர்முஸ் நீரிணை எமது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது, இதில் வெளிநாடுகள் தலையிட முடியாது” என ஈரானிய இராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபாகரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் ஏவுகணை எச்சரிக்கையினால் பதற்றம் நிலவுகிறது.

இதேவேளை, லெபனானின் முக்கிய பாலங்களை இஸ்ரேல் தகர்த்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘வலேரோ’ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னணி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *