இலங்கை

மார்ச் 31க்கு முன் என்னைக் கைது செய்ய அரசு முயற்சி;  உதய கம்மன்பில கூறுகிறார் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நான் வெளியிடுவேன் என்ற அச்சத்தில் மார்ச் 28ஆம் திகதி என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும், ஆனால் நான் கைது செய்யப்பட்டிருந்தாலும், உயிருடன் இருக்காவிட்டாலும் திட்டமிட்டவாறு 31ஆம் திகதி பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் புத்தகம் வெளிவரும் என்றும், இதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் பிவித்துற ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி வெளிப்படுத்த வேண்டுமாயின் மார்ச் 28ஆம் திகதி நடக்கும் வழக்கில் கம்மன்பில வெளியில் வர வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார். அப்படியென்றால் எனது புத்தகம் வெளியில் வருவதை தடுப்பதற்காக மார்ச் 28ஆம் திகதி என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்பதே அமைச்சரின் கதையின் மூலம் வெளிவருகின்றது.

இந்நிலையில் முடிந்தால் மார்ச் 28ஆம் திகதி என்னை கைது செய்துகாட்டுமாறு நான் அமைச்சருக்கு சவால் விடுக்கின்றேன். இதற்கு முன்னர் 6 தடவைகள் என்னை கைது செய்வதற்கு முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்ததால் அந்த முயற்சிகளை கைவிட்டுவிட்டனர் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அமைச்சர் நளிந்த கூறியதன் ஊடாக அந்த முயற்சிகள் தொடர்வதாக தெரிகின்றது.

என்னை கைது செய்யுமளவுக்கு நான் மோசடிகள், குற்றங்கள் செய்ததில்லை. நாங்கள் எந்த தவறாக இருந்தாலும் அது தவறு என்பதனை கூறுவதற்கு நாங்கள் தவறுகள் செய்யாமல் இருப்பதே காரணமாகும். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அரசாங்கம் செயற்படுகின்றது. இவ்வாறான நிலைமையில் நான் புத்தகம் வெளியிடுவதை தடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது என்று தெரிகின்றது. எவ்வாறாயினும் மார்ச் 31ஆம் திகதியளவில் நான் கைது செய்யப்பட்டிருந்தாலும் வெளியில் இருந்தாலும் அல்லது நான் உயிருடன் இல்லாவிட்டாலும் அன்றைய தினத்தில் புத்தகம் வெளிவருவது நிச்சயமாக நடக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *