கட்டுரைகள்

இலங்கையில் 2026 புதிய கல்விச் சீர்திருத்தம்…… சின்னத்தம்பி குருபரன்

‘இலங்கையில் 2026 புதிய கல்விச் சீர்திருத்தம்…… 
தூற்றுவார் தூற்றினும் போற்றுவார் போற்றினும்
புதிய கல்விச் சீர்திருத்தததை விடாது அமுல்படுத்தல் நாட்டுக்குச் சிறப்பு.

சின்னத்தம்பி குருபரன்.

கன்னங்கரா கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தை (கன்னங்கரா யுகம்-1931-1947) இலங்கை கல்வி வரலாற்றின் ‘பொற்காலம்’ என்பர். இக்காலப்பகுதியில், C.W.W கன்னங்கரா அவர்களால் கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இலங்கை சுதநதிரமடைந்த பின்னரில் இருந்து நாட்டுக்கெனப் பல கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று வரை அமுலில் இருந்த அமுல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் எதுவும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்பதே யதார்த்தமாகும். அதேபோல் கல்வி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சீர்திருத்தம், சீராக்கம், திட்டம் நடைமுறைப்படுத்தி அதன் உரிய இலக்கை அடைவதற்கு முன்பாக அரசாங்கம் மாறிப் புதிய திட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்தவிடும். பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையயில் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நடைமுறையில் இருந்த கல்விச் சீர்திருத்தத்தின் பலம் பலவீனம், எதிர்நோக்கிய சவால்கள் பற்றி, வெற்றி தோல்வி பற்றி மதிப்பீடு செய்யப்படாமலே புதிய பாடவிதானச் (8 வருட பாடவிதான வட்டத்துக்கு ஏற்ப) சீராக்கம் அமுலுக்கு வந்துவிடும். அதனால் பலருக்கு வருமானம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தன.

கல்வியும் பொருளாதாரமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. கல்வி பொருளாதாரத்தையும் பொருளாதாரம் கல்வியையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் இவை இரண்டையும் அரசியல்வாதிகள் தம் இஸ்டப்படி வழிநடத்தியமையினாலும் முறையான கண்காணிப்பும் மதிப்பீடும் இன்றி, பலவீனமான கட்டமைப்புக்கூடாக அமுல்படுத்தயமையினால் நாடு தழுவிய ரீதியில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. இலங்கையில் அமுலில் இருந்த கட்டமைக்கப்பட்ட முறைசார் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் விளைவுகள் பெரும்பாலும் அளவு ரீதியான கணிப்பீட்டுக்கு உதவினவே தவிர பண்பு ரீதயான நடைத்தைசார் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தவறிவிட்டன. எழுத்தறிவு வீதம் பற்றிப் பறைசாற்றும் அளவுக்குப் பண்புசார் மாற்றம் பற்றித் தலை நிமிர்ந்து கூறமுடியவில்லை. அதற்குப் பாடசாலைக் கல்வியின் நிறைவு என்பது எழுத்துப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்.

புதிய தலைமுறையின் தலைவிதியை மாற்றுமா கல்விச் சீர்திருத்தம்? - வாரமஞ்சரி

அளவு ரீதியாக எழுத்தறிவு வீதம் 90 ஐத் தண்டிவிட்டதென மார்த்ட்டிக் கொள்ளும் அளவுக்குப் பண்பு ரீதியான எழுத்தறிவு வளர்ச்சியும் நடத்தை மாற்றமும் குறிப்பிடத்தக்க அளிவில் ஏற்படவில்லை என்பதும் உண்மையாகும். ‘நாட்டுக்குப் பொருத்தமான நல்லொழுக்கம்மிக்க நற்பிரசையை உருவாக்குவது’ என்பது கல்வியின் இறுதி இலக்கு. சுதந்திரத்துக்குப் பின்னரான கல்விச் சீர்திருத்தங்கள், கல்விச் சீராக்கங்கள், பாடவிதானச் சீராக்கங்கள் ஊடாக இதனை நிறைவேற்றி இருக்கின்றோமா என்பது விவாதத்துக்குரியது. 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை எங்கோ தவறுகள“ நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. அதனால்தான் கல்வித்துறைக்குள் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அமுல்படுததப்பட்ட செயற்றிட்ங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் எதுவும் எதிர்பார்த்த இலக்கினை அடையவில்லை என்பது கல்விமான்கள் பலரின் கருத்தாக உள்ளன.

இலங்கையில் கன்னங்கரா சீர்திருத்தம், 1972 புதிய பாதை சல்விச் சீர்திருத்தம் இரண்டையும முறையாக அமுல்படுத்திப் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில’ என்பதற்கிணங்க காலத்துக்கும், மாற்றத்துக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தொழில் உலகுக்கு ஏற்றதாகக் கல்வி புனரமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தால் நாட்டில் வேலையற்றோர் பட்டியல் நீண்டு சென்றிருக்கமாட்டாது. பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை (ஒரு சில பாடத் துறைகள் தவிர) வழங்கப்படும் கல்வி தொழில் உலகுக்கு ஏற்றதாக அமையவில்லை. அத்தோடு பாடத் துறைகள் தெரிவு தொடர்பான விழிப்புணர்வும் வழிகாட்டலும் பாடசாலைகளில் சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் பலவீனமாகவே இருக்கின்றன. பாடத் தெரிவு தொடர்பாகப் போதியளவு விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பெரும்பாலான இடைநிலைப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகள், தொழினுட்பப் பிரிவுகள், 13 வருடகாலக் கல்விக் கட்டமைப்பு ஆகியன பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை, இயந்திரம், உபகரணம், கருவி, கணினி ஆகியவற்றின் பற்றாக்குறையும், முறையான பராமரிப்புத் திட்டம் இன்மையாலும் இதன்வழிக் கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை.

கன்னங்கரா பாடசாரை விட்ட பின்னர் இடைநிலை மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சித் (ஹந்தஸ்ஸ) திட்டத்தை அமுல்படுத்தினார். அதற்காக இடைநிலைப் பாடசாலைகள் தோறும் தொழிற் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டன. 1950 கல்வி வெள்ளை அறிக்கையின் மூலம் கன்னங்கராவின் கல்விச் சீர்மிருத்தம் கிடப்பில் போடப்பட்டது. 1972 புதிய பாதை கல்விச் சீர்திருத்தம் மூலம் கன்னங்கராவின் தொழிற்கல்வித் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து பாடவிதானத்தில் தொழிற் கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டதோடு தொழிற் பயிற்சிக் கூடங்கள் இடைநிலைப் பாடசாலைகளில் மீண்டும் நிறுவப்பட்டன. இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுததப்பட்டுக் கொண்டிருநதது.

1981 கல்வி வெள்ளை அறிக்கை வெளிவந்து 1972 சீர்திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கையை ஊக்குவிக்கத்தக்க ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1981 கல்விச் சீர்திருத்தம் பாடசாலைமட்ட தொழிற் கல்விச் செயற்பாட்டினைச் சீரழிப்பதாக அமைந்திருந்தது. 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பாடவிதானச் சீராக்கத்தின் மூலம் பாடசாலைத் தொடர் கணிப்பீட்டுத் (Continue Assessment) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவரைப் பற்றிக் கருத்தில் கொள்ளாது எப்போதும் ஆசிரியர் பக்கம் சார்ந்து நின்று செயற்படும் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் காட்டிய எதிர்ப்பினால் அத்திட்டம் 1988 இல் கைவிடப்பட்டது. இவ்வாறுதான் இலங்கையின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டன.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் ;  கல்வி அமைச்சர் ஹரிணி வெளியிட்டுள்ள முக்கிய விடயங்கள்

பாடசாலைக் கல்வியுடன் தொடர்புடைய சகலவற்றையும் உள்ளடக்கிய முழுமையான கல்விச் சீர்திருத்தம் முதன்முதலாக 1997 இல் மேற்கொள்ளபபட்டது. இது பாடவிதானம், பாடசாலைக் கட்டமைப்பு, ஆசிரியர், அதிபர் பயிற்சி, பாடசாலைக் கணிப்பீட்டுத் திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள், முகாமைத்துவ நிர்வாகக் கட்டமைப்பு, பாடசாலையைவிட்டு இடை விலகியோருக்கான எழுத்தறிவு மற்றும் தொழிற் பயிற்சிகள் போன்ற முறைசாராக் கல்வித் திட்டங்கள் எனப் பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது. வகுப்பறையை ‘ஆண்டு’ என்க் கூறும் சொற்பதம் நீக்கப்பட்டு சர்வதேச நியமத்தின் அடிப்படையில் வகுப்பறையைத் ‘தரம்’ (Grade) என அழைக்கப்பட்டது. ஆனால், கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகளில் பலர் வகுப்பறையை ஆண்டு என்றே இன்றுவரை அழைத்து வருவது கேலிக்குரியது.

கம்பஹா மாவட்டத்தில் 1998 இல் பரீட்சார்த்தமாகவும் 1999 இல் இலங்கை பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடவிதானம் தேர்ச்சி மையப் பாடவிதானம் என அழைக்கப்பட்டது. பாடத்திட்டம் முழுவதும் கல்வியைத் தாங்கி நின்ற நான்கு தூண்களையும் ஒன்பது கல்வி நோக்கங்களையும், ஐந்து அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகளையும் ஆரம்பப் பிரிவுக்கென அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளும், பாடசாலை மட்டக் கணிப்பீட்டுத் திட்டத்தையும் அடிப்படைஆதாரமாகக் கொண்டு பாடத்திட்டம், ஆசிரியர் கைந்நூல், பாடநூல் ஆகியன தயாரிக்கப்பட்டன. வகுப்பறை மடடத்தில் கற்றல் தேர்ச்சிகளை பாடசாலை வகுப்பறைச் செயற்பாட்டு மையக் கற்றலூடாக அறிவு, மனப்பாங்கு, திறனைப் பயிற்சியூடாக (C=KASP-Competency, Knowledge, Attitude, Skills, Practice) வழங்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இதனை அமுல்படுத்துவதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து பெருமளவு கடன் பெறப்பட்டது. பொதுக் கல்விச் செயற்றிட்டத்தின் கீழ் (GEP-2) அதிபர் ஆசிரியர்களுக்குப் பெருமளவு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தேர்ச்சி மையக் கலைத்திட்டச் செயற்பாட்டினை மேலும் விரிவுபடுத்துவதற்காக 2005 இல் தேசிய கல்விக் குறிக்கோள் எட்டாகக் குறைக்கப்பட்டு அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகள் ஐந்தில் இருந்து ஏழாகவும், கல்வியின் நான்கு தூண்கள் ஐந்தாகவும் அதிகரிக்கப்பட்டு, ஆரம்பப் பிரிவுகளுக்குமான அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளும் அதிகரிக்கப்பட்டு 2007 இல் மூன்று தூண்களைக் கொண்டதாகப் புதிய பாடவிதானம் தயாரிக்கப்பட்டது.

எட்டு வருட பாடவிதானச் சீராக்க வட்டத்துக்கு (Eight Year Curriculum Circle) இணங்க 2007 இல் நவீன தேர்ச்சி மையப் பாடவிதானம் (Modernized Competency Based Curriculum) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பாடத்திட்ட அமுலாக்கத்தில் புகுத்தப்பட்ட ரோஜர் கைபியின் கட்டுருவாக்க சிந்தனையில் உருவான 5E பாடவிதான அமுலாக்கத்தில் நவீன திருப்பு முனையாக அமைந்தது. ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல முறை ஒன்று தோல்வி கண்டமைக்கு தேசிய கல்வி நிறுவகம், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர் போன்றோரும் காரணமாக அமைந்தனர். வகுப்பறைக் கல்விச் செயற்பாட்டில் பலவீனமான பெரும்பாலான ஆசியர்களிடம் சிக்கித் தவித்துப் படாத பாடுபட்ட 5E அமுலாக்க முறை 2015 பாடவிதானச சீராக்கத்தில் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது.

2015 இல் அமுலுககு வந்த பாடவிதானச் சீராக்கத்தின் மூலம் பல நல்ல விடயங்கள் நீக்கப்பட்டுச் செயற்பாட்டு மையக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொழில்துறைப் பாடங்களுக்கும் மக்கியத்துவம் அளிக்கப்பட்டன. பெரும்பாலான பலவீனமான அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகளால் இதுவும் தோல்வி கண்டு கொண்டிருக்கிறது. தரம் 10 இலும் உயர் தரத்துக்கான பாடத் தெரிவிலும் உரிய விழிப்புணர்வுகள் செய்யப்படாமையால் பல மாணவர்கள் தாம் விரும்பியவாறு எழுந்தமானமாகப் பாடங்களைத் தெரிவு செய்து கற்கின்றனர். வலயக் கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய மத்திய நிலையங்களிலும் பணியாற்றும் வழிகாட்டலும் ஆலோசனைக்குமான அதிகாரிகள், தொழில் வழிகாட்டல் ஆலோசக உத்தியோகத்தர்களில் பலர் தமது கடமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வேறு அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் வளவாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறனர். இதனால் பாடசாலைகளில் கட்டிளையோர் மத்தியில் வன்முறைகளும், பாலியல் துஷ்பிரயோகங்களும், தற்கொலைகளும் மது. போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துக் கொண்டிருப்பதனை அண்மைக் காலங்களில் பெருவாரியாக அவதானிக்க முடிகிறது.

கடந்த அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைக்க முடிவு - புதிய கல்வி  அமைச்சு !

கல்விச் சீர்திருத்தத்தையும் பாடவிதானச் சீராக்கத்தையும் 2025 இல் தேசிய மக்கள் சக்தி அரசு மேற்கொண்டிருக்கிறது. 28 வருடங்களுக்குப் (1997) பின்னர் கல்விச் சீர்திருத்தமும் 11 வரு்ங்களுக்குப் பின்னர் பாடவிதானச் சீராக்கமும் நிகழ்திருக்கின்றன. இந்க் க்விச் சீர்திருத்தம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதையும், உலகளாவிய ரீதியில் அவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவை. புதிய கல்விச் சீர்திருத்தம் “மாற்றத்தை நோக்கிய தேசிய நோக்கு” என்ற தேசிய இலக்குடனும் “Transform Education -Transform Sri Lanka” (நிலைமாறும் இலங்கையில் நிலை மாற்றத்துக்கான கல்வி) என்ற தேசிய கல்வி நோக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தம், பழைய கல்வி முறையின் குறுகிய எல்லைகளைக் கடந்து, மாணவரை மையப்படுத்திய, திறன் அடிப்படையிலான, செயல்முறை மிக்க (Competency-Based and Activity-Driven) கல்வி அமைப்பை உருவாக்க முனைகிறது. இதவடிவ (Module-based Approach) அணுகுமறையின் அடிப்படையில் வகுப்பறை மட்டத்தில் செயலூக்கமும், செயற்பாடும் உயிரோட்டமும் கொண்ட கற்றலாக அமுல்படுத்தப்பட இருக்கிறது.

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் (Transformative Reforms in Education) மாணவர்களின் சுமையைக் குறைப்பதையும், செய்முறைப் பயிற்சிகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன்படி புதிய கல்விச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட பாடவிதான மறுசீரமைப்பு, நவீன உலகிற்கு ஏற்றவாறான பாடங்கள், பாட உள்ளடக்கம், மனித வள மேம்பாடு, நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கற்றல் சூழல்,
GPA (Grade Point Average) முறையிலான கணிப்பீடும் மதிப்பீடும், சமூக விழிப்பூட்டல் ஆகிய ஐந்து தூண்களை Five Pillers) உள்ளடக்கியது. இந்த அமைப்பின் அடிப்படை இலக்கு, 21ஆம் நூற்றாண்டின் கற்றல் தேவைகளான 4c’s என்ற எண்ணக்கரு, சிந்தனைகளுக்கூடாக் நான்கு திறன்களான விமர்சன சிந்தனை (Critical Thinking), படைப்பாற்றல் (Creativity), இணைச் செயற்பாடு (Collaboration), தகவல் தொடர்புடன் என்மான அறிவு (Communication and Digital Literacy) போன்ற பொதுவான திறன்களை (Generic Skills) மாணவர்களிடையே மேம்படுத்தவே இதவடிவ அடிப்படையிலான கற்றல் அணுகுமுறை (Module-Based Learning Approach) முயற்சிக்கிறது.

பழைய கல்வி அமைப்பில், ஆசிரியர் “அறிவு வழங்குபவர்” (Knowledge Giver) என்ற பாத்திரத்தை வகித்தார். புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், அவர் “கற்றலை வடிவமைக்கும் வழிகாட்டி (Learning Facilitator and Designer)” என்ற வகிபாகத்தை ஏற்க வேண்டியவராகின்றார். இது ஆசிரியர் மையக் கற்றல் முறைமையிலிருந்து கற்போர் மைய அணுகுமுறைக்கு (Learner-Centered Approach) முழுமையாக மாற எத்தனிக்கும் செயற்பாட்டு மையக் கற்றல் அணுகுமுறையாகும்.

புதிய பாடவிதானச் சீர்திருத்தம் திறன் உள்ளடக்கம் (Smart Content), திறன் கற்றல் முறை (Smart Pedagogy), திறன் கணிப்பீடு (Smart Assessment) என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மாற்றத்தின் வடிவமைப்பு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், அதன் வெற்றி அதைச் செயல்படுத்தும் ஆவணங்களிலோ அல்லது நுட்பங்களிலோ அன்றி, வகுப்பறையில் அதை உயிர்ப்பிக்கும் ஆசிரியர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது. உண்மையில் ஆசிரியர்களின் மனப்பாங்கு, அர்ப்பணிப்பு, தொழில்முறை வாண்மைத்துவத்தின் விருத்தியில் தங்கியுள்ளது.

ஆரம்பப் பிரிவில் (தரம் 1-5) பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அவை நான்கு முக்கிய தொகுதிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விளையாட்டுடன் கூடிய செயற்பாடுகள் மூலம் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், சுற்றாடல் சார்ந்த செயல்பாடுகள் (Environment Related Activities – ERA), சமயமும் விழுமியங்களும் (Religion and Values) ஆகிய பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கனிஷ்ட இடைநிலைப் பிரிவு (தரம் 6-9) மாணவர்கள் 12 பாடங்களைக் கற்பதற்குப் பதிலாக, அவை ஏழு அல்லது எட்டு பாடத் தொகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பாடத் தொகுதிகளாகத் தாய்மொழியும் இலக்கியமும் ஆங்கிலம். கணிதம், விஞ்ஞாமும் தொழில்நுட்பமும், சமூக விஞ்ஞாமும் வரலாறும், புவியியல், குடியியல், சமயமும் விழுமியங்களும், கலை கலாசாரம் (இசை, நடனம், சித்திரம், நாடகமும் அரங்கியலும்), தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பம், வாழ்க்கைக்குத் தேவையான கைத்தொழில் பயிற்சிகள். உடற்கல்வியும் சுகாதாரமும் ஆகிய பாடச் சேர்மானங்களை உள்ளடக்கியது. இதன் முக்கிய அம்சங்களாக இறுதிப் பரீட்சைக்கு 70% புள்ளிகளும், வருடம் முழுவதும் மேற்கொள்ளப்படும் வகுப்பறை மதிப்பீடுகளுக்கு (SBA) 30% புள்ளிகளும் வழங்கப்பட இருக்கின்றன. தரம் 6 இல் இருந்து செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படைத் ஆதர்ச்சிகளும் வழங்கப்படவுள்ளன. வெறும் மனப்பாடம் செய்யும் முறைக்குப் பதிலாக, சுயமாகச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்குத் திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு - Oruvan.com

சிரேஷ்ட இடைநிலைப் (தரம (10-11) பாடவிதானம் பொதுப் பாடங்கள் ஐந்துடன் தெரிவுப் பாடங்கள் இரண்டும் சேர்த்து ஏழு பாடங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு ஏழு பாடங்களுக்கே தோற்றுவர். அந்த இரண்டு பாடங்களில் ஒன்றில் மாணவர்களின் எதிர்காலத் தொழில்சார் திறனை விருத்தி செய்யும் வகையிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), வாழ்க்கைக்கான தொழில்நுட்பம் (Technology for Life), தொழில்முனைவு மற்றும் நிதிசார் கல்வியறிவு (Entrepreneurship and Financial Literacy) ஆகிய துறைசார் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவர்களின் வாழ்க்கைக்கான கல்வியை வழங்குவதோடு இலங்கையின் கல்வித் தரத்தைச் சர்வதேச தரத்துக்கு இட்டுச் செல்வதற்கான வாய்பினையும் வழங்குகிறது. தற்பொழுது தினமும் நடைமுறைப்படுத்தப்படும் 40 நிமிடங்கள் கொண்ட பாடவேளை எட்டில் இருந்து ஏழாகக் குறைக்கப்பட்டு ஒவ்வொரு பாட வேளைக்குமான கால அளவு 50 நிமிடங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் பாடசாலை நிறைவுறும் நேரம் 30 நிமிடங்களால் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்விச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட பாடவிதானச் சீராக்கத்தின் வெற்றி முற்று முழுதாக ஆசிரியர்களின் கையில் தங்கி இருந்தாலும் கல்வித்துறையின் முழு முறைமைசார்ந்த செயற்பாடு என்பதையும் மறந்துவிடலாகாது. இதில் அதிபர், கல்வி அதிகாரிகளின் செயல் ரீதியான அர்ப்பணிப்பும் அவசியமாகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னரான கல்விச் சீர்திருத்தங்கள், பாடவிதானச் சீராக்கங்கள் அரசியல்வாதிகளின் தலையீடு, க்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் பலரின் பலவீனத்தால் எதில்பார்த்த இலக்கை அடையாது விட்டதுபோல் 2026 சீர்திருத்தமும் ஆகிவிடக்கூடாது என்பதில் கல்வி அமைச்சு மிகுந்த கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும். தரம் 6 க்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தேசிய கல்வி நிறுவகத்தின் கவனயீனத்தால் அமுல்படுத்துவது தடைப்பட்டது போல் புதிய பாடவிதானச் சீராக்கம் அமுல்படுத்துவதில் பலவீனம் காணப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் எத்தரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவதில் பின்வாங்கக் கூடாது. அப்போதுதான் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒவ்வொரு அதிகாரிகளும் அதிபர்களும் தேர்ந்த போதனாவழித் தலைவர்களாக (Instructional Leader) மாற வேண்டும். ஆசிரியர்கள் உயிரோட்டமும் செயலூக்கமும் நிறைந்த வகுப்பறைக் கற்றல் செயல்முறையை முன்னெடுப்பதற்காகத் தமது அறிவைத் தினமும் இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக் கணினி வழிக் கல்வி, கணினி ஊடான கல்வி, வருவழிக் கல்வி, வாழ்க்கை பராகவும் கல்வி என்பவற்றின் ஊடாகத் தமது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள முடியாத ஆசிரியரும் அதிபர், கல்வி அதிகாரிகளும் காலாவதியாகியவர்களாகக் கருதப்படுவார்கள். அதேபோல் அறிவுப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்யாத கல்வியும் காலாவதியாகிய கல்வியாகக் கருதப்படும்.

ஓர் ஆசிரியரிடம் ஆக்கச்சிந்தனை, செயலூக்கம், நாட்டின் கல்வி இலக்கு, கல்வி நோக்கம், கற்றல் முறைகள், கற்றல் பாங்கு (பாணி -Style), கற்றல் கட்டங்கள், கற்றல் நுட்பங்கள், உத்திகள் (உபாயம்-Strategy), வகிபாகம், நடிபங்கு, அறிவைத் தினமும் இற்றைப்படுத்தல், ஆரோக்கியமான தொடர்பாடல், பாடத்திட்ட அமுலாக்கம் பற்றிய தெளிவு, பாடத்தோடு தொடர்புடைய தொடருறு பயிற்சிகள் (Continue Training), பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிற்சிகள், உபகரணம் தயாரித்தல், பயன்படுத்தல் தெடர்பான பயிற்சி, பிள்ளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சிக் கட்டங்கள் தொடர்பான தெளிவு, பன்முக நுண்மதி, சமநிலை ஆளுமை, தேச்ச்சிகள், மதிப்பீடு, கணிப்பீட்டு முறைகள், பிள்ளை மையக் கற்றல் அணுகுமுறை, நேர் வகுப்பறை முகாமைத்துவம் (Positive Classroom Management), பாடத்தைத் திட்டமிடல் தொடர்பான விள்ளகம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு, கல்வியின் ஐந்து தூண்கள் (ஆகக் கல், செய்யக் கல், கற்கக் கல், வாழக் கல், மற்றவருடன் சேர்ந்து வாழக் கல்) பற்றிய விளிப்புணர்வு, 21 ஆம் நூற்றாண்டில் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய நான்கு திறன்கள் (4C’s), மாற்றத்தை உள்வாங்கும் மனப்பாங்கு ஆகியன ஓர் உயிரோட்டமான ஆசிரியரிடம் இருத்தல் அவசியம். இந்த விடயங்களை அதிபர், கல்வி அதிகாரிகளும் அறிந்திருக்க வேண்டும்.

புதிய கல்விச் சீர்திருத்தம், பாடவிதானச் சீராக்கத்தின்படி ஆசிரியரின் வகிபாகம் பிரதானமானதாகும். ஆசிரியர் வெறுமனே அறிவை வழங்குபவர் மாத்திரமல்ல, கற்றலின் சிற்பி, அவர் கற்றல் வசதிப்படுத்துனராகவும் வடிவமைப்பாளராகவும், ஆலோசனை வழிகாட்டியாகவும், முன் திட்டமிடல், மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளராகவும், வெளிப்படைத் தன்மை கொண்டவராகவும், பிரச்சினைகள், சவால்களுக்கு முகங்கொடுத்துத் தீர்வு காணக்கூடியவராகவும், நேர முகாமைத்துவம் பேணக்கூடியவராகவும், புதியன புனையும் திறன் கொண்டவராகவும் தொழிற்படுபவராக இருப்பார்.

இதனை அமுல்படுத்துவதில் பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டி இருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எதிர்ப்பு, ஆசிரியர் தொழிற் சங்கங்களின் எதிர்ப்பு, பாடத்திட்டம் தயாரிப்பு, இதவடிவம் தயாரிப்பு, பயிற்றுவிப்பாளர்களுக்கான வளவாளர் பயிற்சி, ஆசிரியர், அதிபர், கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி, சமூகத்துக்கான விழிப்புணர்வு, பாடசாலை நேர அதிகரிப்பு, வளப் பற்றாக்குறை, 40 வீத்ததுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் கணினிப் பயன்பாடு தொடர்பான அடிப்படை அறிவின்மை, 60 வீதத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளில் இணைய வசதிகள் இன்மை, ஆசிரியர் பற்றாக்குறை, பல பாடசாலைகளில் காணப்படும் பலவீனமான நிர்வாக, முகாமைத்துவக் கட்டமைப்பு. வளப் பங்கீட்டில் சீரின்மை, கல்விக்கான நிதி ஒதுக்கீடு போதாமை, பல பாடங்களுக்கு உரிய, பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிக்கு வளவாளர்களை அனுப்புவதில் காணப்படும் சீர்கேடுகள், உயிரோட்டமில்லாத பல வகுப்பறைகளும் ஆசிரியர்களும், அதிகாரிகளிடம் இருந்து பல ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமை, தொடர் கண்காணிப்பும் மதிப்பீடும் செய்வதிலுள்ள சிரமங்கள் ஆகிய பலவற்றைச் சவாலாகக் குறிப்பிடலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னரான கல்விச் சீர்திருத்தம், பாடவிதானச் சீராக்கங்கள் யாவும் உரிய இலக்கை அடையாமல் போனமைக்கு பல அரசியல்வாதிகள்கள், தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆகியன காரணமாக இருந்திருக்கின்றன. அதே பலவீனமான கட்டமைப்பே இப்போதும் இருக்கிறது. இவர்களைக் கொண்டே கல்வி அமைச்சு புதிய கல்விச் சீர்திருத்தத்தை அமுலாக்கம் செய்ய உத்தேசித்திருக்கிறது. இதனை அமுல்படுத்தும்போது மாகாண, வலய, கோட்ட மட்டத்திலான முறையான கண்காணிப்பும் மதிப்பீடும், பின்னூட்டலும் இல்லையெனில் இதற்கும் அது பொன்ற தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பல வலயக் கல்வி அலுவலகங்களில் நிகழும் அதிகாரப் போட்டிகளும், பழிவாங்கல்களும், ஓரங்கட்டல்களும், அதிகாரிகள் பலருக்கு வக்காலத்து வாங்கும் போக்கும், ஒரு சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தமக்கு எப்போதும் பக்கப்பாட்டுப் பாடும் தலையாட்டிப் பொம்மைகள் சிலரை அருகில் வைத்துக் கொண்டு குட்டி இராசாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். முறையற்ற இடமாற்றங்களும் ‘பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போலான நிலையைத் தோற்றுவித்துவிடும். ஏனெனில் பல பாடசாலைகளும் வலயங்களும் பிரத்தியேக வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்கும் தேசியப் பரிட்சைப் பெறுகளில் வீராப்புப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இறுதித் தேசியப் பரீட்சை நோக்கிய கல்விக்காக மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்வதனால் பெற்றார் படும் துன்ப துயரங்களும் சுமைகளும் யாருக்கும் விளங்குவதில்லை. இத்தகைய பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பிரத்தியேக வகுப்புக்கள்தான் காரணமென்றால் பாடசாலைகள் எதற்கு எனப் பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இது எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு எதிரான மாற்றுச் சிந்தனையைத் தோற்றுவித்துவிடும்.

க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவு மாணவர்கள் பாடசாலைக் கற்றல் தவிர ஒரு பாடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரத்தியேக பகுப்புக்களுக்குச் சென்றே கற்கின்றனர். பரீட்சைத் திணைக்களத்தின் உயிரியல் 1, 11 வினாப்பத்திரத்தில் 2019 முதல் கலைச் சொல் பரீட்சயம் இல்லாத நபர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் காணப்பட்டுவரும் அதிகமான தவறுகள், கருத்துச் சிதைவுகள் தொடர்பாக பலமுறை சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் 2026 வரை நடந்த பரீட்சை வினாப்பத்திரங்களிலும் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. விடைத்தாள் மதிப்பீட்டுப் புள்ளித் திட்டமும்கூட அதற்கு ஏற்ற விதமாகவே அமைந்திருந்தன. இது தொடர்பாகப் பாராளுமன்றத்திலும் இரு தடவைகள் பேசப்பட்டிருக்கின்றன. இதற்கு இரு பேராசிரியர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். பரீட்சைத் திணைக்களத்தினால் அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க முடிவதில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதனால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டு நிற்கின்றார்கள். இவ்வாறுதான் சகல துறைகளிலும் தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கல்வி அமைச்சின் நிர்வாக, முகாமைத்துவக் கட்டமைப்பு முறையின்கீழ் 1985 இல் ஆரம்பிக்கப்பட்ட கொத்தணிப் பாடசாலை முறைமை விதந்துரைக்கப்பட்ட அதிகாரத்தை வழங்க மாவட்ட கல்விப் பணிப்பாளர்கள் பலர் மறுத்தமையால் 1993 இல் தோல்வி கண்டது. அதேபோல் 1994 இல் ஆரும்பிக்கப்பட்ட கோட்டக் கல்வி அலுவலக (பிரதேசக் கல்விக் காரியாலயம்) முறை 2000 ஆம் ஆண்டுடன் நிறைவு பெற்று அதே ஆண்டில் வலயக் கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டக் கல்வி அலுவலகங்கள் அதிகாரப் பரவலாக்கம் இன்றிக் கல்வி அபிவிருத்திப் பணிக்கு மாத்திரம் வலயத்துக்குப் பங்களிப்புச் செய்கின்ற (தபால்காரன் போன்றதொரு) பணியைச் செய்து கொண்டிருக்கிறது.

1997 இல் அங்கீகரிக்கப்பட்டு 1998, 1999 இல் நிடைமுறைக்கு வந்த பரந்த அடிப்படையிலான கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியும் ஆசிய அபிவருத்தி வங்கியும் அதிபர் ஆசிரியர் பயிற்சி, உள்கட்டுமாளம், புனமைப்பு, தரமான உள்ளீடு (Quality Input) என்பவற்றுக்காக ‘கல்விப் பிரிவு அபிவிருத்திச் சட்டகமும் நிகழ்ச்சித் திட்டத்துக்காகப் (ESDFP) பெருமளவு கடனுதவி பெறப்பட்டன. மாணவர்களின் வகுப்பறைக் கற்றலை மேம்படுத்துவதற்காகவும் ஆசிரியர்களின் பயிற்சிக்காகவும் ‘கல்வி நியமம்சார அலகுச் செலவுக்கான வள ஒதுக்கீட்டுப் பொறிமுறை (ENBUCRAM) என்ற சட்டகத்துக்கூடாகப் பெருமளவு நிதி பாடநாலைகளுக்குக் கிடைக்கின்றன. அத்தோடு மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தவென தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் Light House School முறைமை, Unicef, Safe the Children, Plan International ஆகிய நிறுவனங்களின் உதவித் திட்டத்தின்கீழ் 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட பிள்ளை நேயப் பாடசாலை (Child Friendly School) அபிவிருத்தித் திட்டத்துக்கூடாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டம், 2005 இல் சில வலயங்களில் பரீட்சார்த்தமாக அறிமுகம் செய்யப்பட்டு 2012 இல் இலங்கையின் சகல அரச பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் (EPSI), உலக வங்கி நிதியீட்டத்தில் 2005 இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மட்ட ஆசிரியர் அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், உலக வஙகி நிதியீட்டத்தில் கல்வி அமைச்சின் ‘ஆசிரியர் கல்வி ஆசிரியர் இடநிலைப்படுத்தல் (Teacher Education, Teacher Deployment-TETD) செயற்றிட்டத்தின் கீழ் 1999 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் மத்திய நிலையங்கள், உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான, சுனாமிக்குப் பின்னராக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், ஐரோப்பிய யூனியன் அபிவிருத்தித் திட்டம், அமெரிக்க US Aid அபிவிருத்தித் திட்டம், இசுறு பாடசாலை அபிவிருத்தித் திட்டம், Koica பாடசாலை அபிவிருத்தித் திட்டம், EKSP, GEP-1, GEP-2, SEMP, GTZ போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள், இரு மொழிக் கல்வி (Bilingual Education), வாழ்க்கைத் திறனுக்கான ஆங்கிலம் (English as a Life Skills), யாவர்க்கும் ஆங்கிலம் (English for All), அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை (ISBS) அபிவிருத்தித் திட்டம், தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் என்பவற்றுடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்கள் யாவும் எந்தளவு வெற்றி கண்டன என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். இத்திட்டங்கள் யாவும் முழுமையான இலக்கை அடையாமல் போனமைக்குக் பல கல்வி அதிகரிகள், அதிபர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர் காரணமாக இருந்தனர். பல கோடி ரூபா செலவில் ஆசிரியர்களுக்குத் தொடருறு பயிற்சி, ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிச்சிகள் வழங்குவதற்காகக் கல்வி அமைச்சினால் வலயங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சிலரின் தூரநோக்கற்ற செயற்பாட்டினால் வளங்களுடன் தூங்கிக் கொண்டிருக்க நிர்வாகம், முகாமைத்துவமும் கண்காணிப்பு மதிப்பீடும் செய்யவேண்டிய வலயக் கல்வி அலுவலகங்கள் இத்தகைய பயிற்சிகளை பணிப்பாளரின் வசதிக்கேற்ப நடத்திக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான பாடசாலைகளில் பாடசாலைச் சுயமதிப்பீடு செய்து பாடசாலையின் தூரநோக்கு, பணிக்கூற்றுக்கும் மாறிவரும் உலக மாற்றங்களுக்கும் ஏற்ற வகையிலான செயலூக்கம் நிறைந்த உயிப்பான பேண்தகு பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கான பாடசாலை அபிவிருத்தித் திட்டம் தயாரிக்க முடியாத பலவீனமான அதிபர்கள் பலர் காணப்படுகின்றனர். ஒரு சிறந்த பாடசாலை என்பது உயிரோட்டமான அதிபரின் தலைமைத்துவத்தில் தங்கி இருக்கிறது. தமது இலாப, நட்டக் கணக்கினைத் தினமும் பார்க்கும் அதிகாரிகளாலோ, அதிபர், ஆசிரியர்களாலோ சிறந்த பாடசாலையை உருவாக்க முடியாது.

கல்வி அமைச்சு கல்விச் சீர்திருத்தம், பாடவிதனச் சீராக்கம் ஆகியவற்றைத் தயாரித்து தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றுக்கு அடுத்த கட்டப் பூர்வாங்கச் செயற்பாடுகளுக்காக வழங்குகிறது. தேசிய கல்வி நிறுவகம் அதனைக் கொண்டு பாடத்திட்டம், ஆசிரியர் கைந்நூல், இதவடிவம் ஆகியவற்றைத் தயாரித்து வலய, மாகாண மட்டத்தில் பாடவிதானத்தை அமுலாக்கம் செய்வதற்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகளை (ToT) வழங்கும். இதற்கு அமைவாகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பாடநூல்களைத் தயாரித்து வழங்கும். பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கான தேசிய மட்டப் பரீட்சைகளை நடாத்திப் பெறுபேறுகளை வழங்கும். பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் கைந்நூல், இதவடிவம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்காக உயர்மட்ட நிபுணர் குழுவுடன் பாடரீதியிலான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், தெரிவு செய்யப்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஆகியோர்களைக் கொண்டு தயாரிக்கப்படும். இது ஒரு குழுச் செயற்பாடு. கல்வி அமைச்சுக்கு இருப்பது 1008 பணிகள். பொறுப்புக்களைத் தனக்குக் கீழுள்ள உரிய நிறுவனங்களிடம் கையளித்துக் கட்டளைகளைப் பிறப்பித்து ஆலோசனைகளை வழங்கும். தினமும் முழுமையான கண்கானிப்புச் செய்வதற்குக் கல்வி அமைச்சிடம் போதுமான ஆளணியும் கிடையாது.

பாடவிதானம், பாடத்திட்டம் என்பவற்றுக்கு அமைவாகப் பாடநூல், ஆசிரியர் கைந்நூல், இதவடிவம் ஆகியன தயாரிக்கப்படும். இதனை உரிய பாடத்துக்குரிய சிறப்புக் குழுக்கள் மேற்கொள்ளும். அவ்வாறுதான தரம் 6 ஆங்கில பாடம் முதலாம் தவணைக்கான இதவடிவம் தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதவடிவத்தில் ஏற்பட்ட பிழைகள், தவறுகளுக்குரிய முழுப் பொறுப்புக்களையும் இதவடிவத் தயாரிப்புக் குழுவே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் செயத பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு பணி நிறைவின்போது தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டது. இதவடிவத் தயாரிப்பின்போது மேலதிக தேடலுக்காக ஒவ்வொரு அலகு இறுதியிலும் இணையத்மள முகவரிகள் இடப்பட்டிருக்கின்றன. இம்முகவரிகள் சரியானதுதான் என்பதை ஒன்றுக்குப் பத்துத் தடவை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழுவிலுள்ள சகலரும் திறன்பேசி (Smart Phone) வைத்திருந்திருப்பார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையிலாவது அதனை உறுதி செய்திருக்கலாம். உறுதி செய்யவில்லை. கடமை, பொறுப்புக் கையளிப்பு, வகைகூறல் என்பவற்றுக்குக் கட்டுப்பட்டதே இதவடிவத் தயாரிப்புக் குழு. குழுவில் கடமை, பொறுப்பு, வகைகூறல் என்பவற்றை மறந்து ஏனோதானோ எனச் செயற்பட்டதனால் கல்வி அமைச்சு மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்டது. உரிய திருத்தங்களை மேற்கொண்டு தரம் 6 க்கான புதிய பாடவிதானச் சீராக்கத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாம். தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பாடத்துக்குப் பொறுப்பான அதிகாரியனையும், பொறுப்பற்றுக் குழுவில் பணியாற்றியவர்களையும் பணிநீக்கம் செய்து சட்ட நடவடக்கை எடுத்துத் தண்டனை வழங்குவதை விடுத்து, புதிய கல்விச் சீர்திருத்தம் தரம் 6 இல் அமுலாக்கம் செய்வது நிறுத்தப்பட்டமை அரசின் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துவிட்டது.

New school term begins for most students across the country - LNW Lanka  News Web

அடுத்தடுத்த வருடங்களில் ஏனைய வகுப்புக்களுக்கும் புதிய சீராக்கம் அமுல்படுத்த போது மாணவர் சார்பாகவன்றி ஆசிரியர்களுக்கு மாத்திரம் குரல்கொடுக்கும் ஆசிரியர் தொழிற் சங்கத்தினராலும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாலும் பலவீனமான அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்களாலும் இலத்திரனியல் ஊடகங்கள், சமூக வலைத்தள ஊடகங்களாலும் பல்வேறுபட்ட சவால்கள், பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். அதற்கெல்லாம் வளைந்து கொடுத்தால் 28 வருடங்களின் பின்னர் அமுலாக்கம் செய்யப்படும் புதிய கல்விச் சீர்திருத்தத்தையும் 11 வருடங்களின் பின்னர் அமுலாக்கம் செய்யப்படும் பாடவிதானத்தையும் அமுலாக்கம் செய்யமுடியாது போகலாம். ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்பதுபோல் தரம் 2, 6, 10 ஆகிய வகுப்பக்களுக்கு அமுலாக்கம் செய்வதில் பின்னிக்கக் கூடாது. எத்தகைய சவால்கள் வந்தாலும் நடைமுறைப்படுத்தியே தீர வெண்டும். இதற்குப் பக்கபலமாக இல்லாத அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களைக் களையெடுப்பதிலும் பின்வாங்கக் கூடாது. தற்போதைய நிலை மாற்றத்துக்கு ஏற்ற கல்விச் சீர்திருத்தத்தையே நாட்டு மக்கள் நேசிக்கின்றனர் என்பதைச் சுயாதீனமான பேரணிகள் மூலம் மக்கள் நிருபித்திருக்கின்றனர். மக்களும் கல்வி அமைச்சர்மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பது பல சந்தர்ப்பங்களில் நருபிக்கப்பட்டிருப்பதனால் கல்வி அமைச்சு தயங்காது புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே நாட்டுக்குச் சிறப்பைத் தரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *