மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளைக் காண ஒற்றை இலக்க நாட்களில் ஜனாதிபதி; இரட்டை இலக்க நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய நிலைமையில் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை காண வேண்டுமாயின் ஒற்றை இலக்க தினங்களில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகவும் இரட்டை இலக்க தினங்களில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகிக்க வேண்டுமெனவும் சர்வஜன பலய கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சன்ன ஜயசுமன மேலும் கூறுகையில்,
அன்று கொவிட் காலத்தில் நாங்கள் வழங்கியதை போன்ற நிவாரணங்களை தற்போதைய நிலைமையில் அரசாங்கம் மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 10ஆயிரம் ரூபா நிவாரணத்தையாவது வழங்க வேண்டும்.
இதேவேளை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒன்றை, இரட்டை இலக்க தின அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதை போன்று ஜனாதிபதியும் ஒற்றை தினங்களில் ஜனாதிபதி பதவியில் இருக்குமாறும், இரட்டை தினங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்குமாறும் நாங்கள் கோருகின்றோம். அவ்வாறு இருந்தால் இரட்டை தினங்களில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது இந்த சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை முன்வைப்பார். மறுநாள் ஒற்றை தினத்தில் ஜனாதிபதியாக அவரால் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இதுவே இப்போதுள்ள இலகுவான தீர்வாக இருக்கும் என்றார்.
![]()