இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஆட்சியாளர்களுக்கு முன்னரே தெரியுமா?; அருட்தந்தை ரோஹான் கேள்வி

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா? என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான நீதி மற்றும் விசாரணைகள் குறித்து சமூகத்தில் ஒருவித பதற்றமும் எதிர்பார்ப்பும் தானாகவே உருவாகின்றது.

கடந்த ஏழு வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதைய நகர்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் அவரது பெயர் இந்தச் சம்பவங்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாதவாறு மறைப்பதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சுரேஷ் சலேயின் கைதுக்கு ‘சனல் 4’ ஊடகத்தில் அசாத் மௌலானா வெளியிட்ட கருத்துக்களே காரணம் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையின்படி, இராணுவத்தில் பணியாற்றிய சிலரின் சாட்சியங்களே இந்தத் தீர்மானமிக்க கைதுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து முன்னரே அறிந்திருக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. இவ்வளவு காலம் கழித்து தற்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறித்துச் சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *