கவிதைகள்

மனிதனோ விலங்காய் மாறியே விடுகிறான்!… கவிதை…. ஜெயராமசர்மா

நாயிருக்கு நரியிருக்கு சிங்கமிருக்கு சிறுத்தையிருக்கு
அதனதன் பாட்டில் அவையெலாம் இருக்கு
நாட்டிலே இருக்கும் மனிதர்கள் மட்டும்
செய்யும் அனைத்துமே சிறுமையாய் இருக்கு

திட்டும் வார்த்தைக்குத் தேடுறோம் பெயர்களை
நாயைச் சேர்க்கிறோம் நரியைச் சேர்க்கிறோம்
சிங்கத்தைச் சிறுத்தையும் சேர்த்துமே நிற்கிறோம்
வந்ததைச் சொல்லி வதைக்கிறோம் மனங்களை

போடா நாயே போக்கிரிப் பயலே
நரிக்குணம் படைத்த சகுனிதான் நீயே
சிங்கமாய் சீறி சிறுத்தையாய் பாய்ந்து
எங்களின் ஆத்திரம் போக்கிட முயல்கிறோம்

நாயும் நரியும் நமக்கென்ன செய்தன
சிங்கமும் சிறுத்தையும் சீண்டவா வந்தன
தங்களின் வழியில் போகும் அவற்றை
எங்களின் இழிகுணம் இப்படி எடுப்பதா

நாயெனும் பெயரை வைத்தவர் யாரோ
நரியென்னும் பெயரை வைத்தவர் யாரோ
சிங்கம் சிறுத்தை பெயரிட்ட தாரோ
எல்லாம் மனிதனின் பொல்லாத் தனமே

ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு விதமே
விலங்குகள் வில்லங்கம் தரவர மாட்டா
மனிதநோ விலங்கை விட்டுமே வையான்
விலங்குகள் விலகிடும் மனதனோ விலகான்

மனிதனே தன்னை உயர்வெனக் கருதி
பகுத்தறி வாளன் பட்டம் கொடுக்கிறான்
அஃறிணை என்று விலங்கை அழைக்கிறான்
மனிதனோ விலங்காய் மாறியே விடுகிறான் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *