அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும்!… கவிதை… ஜெயராமசர்மா

நீல வானத்தில் நெருப்புக் கோளம்
வெடித்துச் சிதறி வெந்தணலாய் வீழ்கிறது
நிலமெங்கும் நெருப்பாறு நீண்டோடி நிற்கிறது
சிதறிய உடல்கள் பரவியே கிடக்கிறது
ஓலமிடும் குரல்கள் உலுக்கியே நிற்கிறது
வானிருந்து குண்டுமழை பொழிந்தபடி இருக்கிறது
வட்டமிடும் கழுகாக வந்துவிழும் எறிகணைகள்
மனிதவுயிர் பாராமல் பலியெடுத்து நிற்கிறது
நீள்கடலும் வானும் நீண்டநிலப் பரப்பும்
போர்முழக்கம் கேளா செய்துவிடல் வேண்டும்
போரரக்கன் ஓட பேரெழிச்சி கொண்டு
சமாதானச் சங்கெடுத்து ஊதிவிட வேண்டும்
மண்ணாசை பொன்னாசை மாறாத ஆசை
வாய்பேசாக் குழந்தைகளை வதைக்க வருகிறதே
பள்ளிகள் மீதெல்லாம் அள்ளியே வீசி
பாலகர்கள் மடிவதனை வேடிக்கை பார்க்கிறதே
ஊரெல்லாம் பற்றியே எரிகின்ற வேளை
உப்பரிகை உல்லாசம் ஒருகாலும் நிலைக்கா
பிணந்தின்னும் பேய்களாய் மாறுகின்ற மனங்கள்
பிணமாகப் போவதை அறியாத தேனோ ?
ஓலமிடும் குரல்கள் ஓய்ந்துவிட வேண்டும்
நீள்நிலத்தில் அமைதி நிறைந்து விடவேண்டும்
ஆரழுதும் நிற்கா ஆறுதலே வேண்டும்
அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()