முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?….. சங்கர சுப்பிரமணியன்


காய்கறிக்கடையில் காய்கறி வாங்கும்போது
சந்தித்துக் கொண்ட முகுந்தனும் முரளீதரனும்
வசந்த் நகர் வானவராயன் தெருவழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காய்கறிக் கடைகள் இருந்த சந்தை ஊருக்கு வெளியே சற்று தூரத்தில் இருந்தது. இது ஒன்றுதான் வசந்த் நகரில் வசதியற்ற தன்மை. மற்ற எல்லா வசதிகளும் அங்கு இருந்தன.
காய்கறி வாங்கிவிட்டு ஒற்றைக் குரங்காய் வரவேண்டியிருந்த நண்பர்கள் இருவரும் காய்கறிச் சந்தையில் சந்தித்தது பேசிக்கொண்டே செல்ல வசதியாய் இருந்தது. அப்படி பேசிக்கொண்டே
சென்றபோது தெரு முக்கில் இருந்த கற்ககம் உணவகத்தைக் கடந்து செற்றனர்.
அப்போது முகுந்தன் முரளியிடம்,
“முரளி எப்போது இந்த பக்கம் வந்தாலும் என்னால் பூசணிக்காயை மறக்க முடியவில்லையடா” என்றான்.
“இந்த பக்கம் வருவதற்கும் பூசணிக்காய்க்கும் என்னடா சம்பந்தம்”
“சொல்றன். இந்த கற்பகம் உணவகத்தில் என் மனைவி ஊருக்கு சென்றிருந்தபோது ஒருநாள் சாப்பிட்டேன். பூசணிக்காய் சாம்பார் வைத்திருந்தார்கள். அவ்வளவு சுவையாக இருந்தது. அதன்பின் அந்தமாதிரி சாம்பாரை நான் சாப்பிட்டதே இல்லை” என்றான்.
“அப்படியா? அவ்வளவு நல்லா இருந்ததா? சரி, அதை ஏன் இப்ப ஞாபகப் படுத்துற?”
முரளியின் கேள்விக்கு பதிலளித்த முகுந்தன் நேற்று ஒரு கதை படித்தேன் அதுவும் பூசணிக்காய் சம்பந்தப்பட்டதுதான் என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தான்.
ஒரு ஊரில் முருகையா என்ற செல்வந்தன் இருந்தானாம். அவன் ஊர்மக்களுக்கு நல்லவைகளைச் செய்து பெயர்பெற்றவன். ஒருநாள் அவனும் அவன் மனைவியும் அவர்களது தோட்டத்திற்கு சென்று திரும்பி வரும்போது இன்னொரு தோட்டத்தில் பூசணிக்காய் நிறைய காய்த்துக் கிடந்ததைப் பார்த்தார்கள். அப்போது முருகையாவின் மனைவியின் கண்களில் பளபளவென்றிருந்த பூசணிக்காய் ஒன்று தென்பட்டது.

உடனே அவள் கணவனிடம் அதை எடுத்துச் செல்லலாம் என்றிருக்கிறாள். அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி இவ்வளவு காய்கள் காய்துக் கிடக்கின்றன. இதில் ஒரு காயை எடுத்தால் தெரியவா போகிறது. அதுவும் அக்கம் பக்கம் யாருமே இல்லை என்று அடம்பிடிக்கவே வேறு வழியின்றி முருகையா உடன்பட அவள் விரும்பிய பூசணிக்காயை எடுத்துச் சென்றனர்.
இது யாருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்தாலும் இரண்டு தோட்டத்திற்கு அப்பால் இருந்த பம்ப்செட் ரூமுக்குள் இருந்த பிச்சாண்டி கண்ணில் பட்டுவிட்டது. பிச்சாண்டி ஒரு மாதிரி ஆள். அவன் பார்த்ததை ஊர் முழுக்க பரப்பிவிட்டான். ஊர் முழுக்க பரவிய செய்தி முருகையா தம்பதியருக்கும் தெரிய வந்து பெருத்த அவமானமாய்ப் போயிற்று.
ஏற்பட்ட அவமானத்தை போக்க நினைத்த முருகையா தம்பதியினர் ஒரு திட்டம் தீட்டினர். முருகையாவின் பிறந்த நாளையொட்டி ஊரை அழைத்து தடபுடலாக பெரிய விருந்து கொடுத்தனர். கொஞ்ச நாட்களில் இவ்வளவு செலவுசெய்து இப்படியான விருந்தைக் கொடுப்பவர்கள் போயும் போயும் பூசணிக்காயைத் திருடுவார்களா? என்று பேச பூசணிக்காய் திருடியது மறந்தே போயிற்று.
கதையைச் சொல்லி முகுந்தன் முடிக்கவும் இந்த கதையை நானும் எப்போதோ படித்த ஞாபகம் வருகிறது. ஆனால் பூசணிக்காய் சாம்பார் போல இப்ப எதற்காக இந்தக் கதையைச் சொல்கிறாய் என்று முரளி கேட்டான். அதுவா இப்ப நான் சொல்லவருவது திரைப்பட விமர்சகர் தியாகுவைப் பற்றியது என்று சொல்ல ஆரம்பித்தான்.
“நீ சமீபத்தில் ராம்ஜி நடித்து வெளிவந்த “இப்படியும் மனிதர்களா” படம் பார்த்தாயா?” என்று கேட்டான் முகுந்தன்.
“இல்லையே”
“முதலில் அந்தப் படத்தைப்பார். அப்புறம் உனக்கே தியாகுவைப் பற்றி தெரிய வரும்”
“அட, படம் பார்ப்பது இருக்கட்டும் சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லவருவதை சொல்லப்பா” என்று முரளி வற்புறுத்தினான்.
சரி, சொல்லாட்டா விடவா போற என்று ஆரம்பித்தான் முகுந்தன். அந்த படத்தில் நான்கைந்து பாடல்கள் வருகின்றன. எல்லா பாடல்களுமே நல்லாகவே இருக்கிறது. ஆனால் தியாகு எல்லா பாடல்களையுமே ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியவர் பழையபாடகர் பாலமுருகன் இயற்றி கனகமுத்து பாடிய பாடலைப் பற்றி ஒரு வார்தைகூட சொல்லாமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் என்று சொல்லி முடித்தான்.
முகுந்தன் சொன்னதை விடாமல் கேட்டுவந்த முரளிக்கு அதை நம்ம முடியவில்லை. இப்படியும் மனிதர்களா என்று சொல்லி வியப்படைந்தான்.
அதற்கு முகுந்தன் இதெல்லாம் திரைப்படத் துறையில் சகஜமப்பா. திரைப்படத்துறை போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம் என்று எல்லோருக்கம் தெரியும். தியாகுவும் இலேசுப்பட்ட மனிதர் அல்ல. அடுத்து படங்கள் வராமலா போகும். அப்படி வரும் படங்களில் இன்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையை மறக்க வைத்து விடுவார் என்றான்.
அப்படியா? என்று அப்பாவியாக கேட்ட முரளியிடம், பார்த்துக் கொண்டே இரு. இனிவரும் படங்களில் ஏதாவதொரு படத்தில் பாடலாசிரியர் இயற்றி பின்னணிப் பாடகர் பாடிய ஒரு மொக்கைப் பாடலென்றாலும் ஆகா ஓகோ என்று பாராட்டித்தள்ளுவார் என்றான்.
அதற்கு அப்பாவியாக இதுவரை கேட்டுவந்த முரளி அப்படியும் செய்யலாம் அல்லது கண்டும் காணாததுபோல் இருந்தும் விடலாம் அல்லாவா என்று தன் கருத்தைச் சொன்னேன். அதற்கு முகுந்தன் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று சொல்லவே அவனது வீடும் வந்தது.
சரி, முரளி அப்புறம் சந்திப்போம் ஊர்க்கதையை பேசிவந்ததில் கடந்துவந்த தூரமே தெரியவில்லை. இன்று பூசணிக்காயும் வாங்கியிருக்கிறேன். மனைவியிடம் சாம்பார் வைக்க சொல்லவேண்டும். இன்றைக்காவது அந்த சுவை வருகிறதா என்று பார்பபோம் என்று கூறி நண்பனிடமிருந்து விடைபெற்றான். வாய் கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை முனக கால்கள் வீட்டை நோக்கி நடந்தன.
![]()