மாகாண சபைத் தேர்தல் குறித்த விசேட செயற்குழு தாமதமின்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

மாகாணசபைத் தேர்தல் குறித்து கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து பாராளுமன்ற விசேட செயற்குழு அவதானம் செலுத்திய தாமதமில்லாமல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனநாயகத்தின் பிரதான அங்கமாகவே தேர்தல் காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலினால் பல ஆண்டுகாலமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு தேர்தலை நடத்துவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை.
தேர்தலை நடத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு பிரசன்னமாகிஆணைக்குழுவின் சார்பில் யோசனைகளை முன்வைத்துள்ளோம். மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதலாவது கூட்டத்தை நடத்தியதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட செயற்குழு தாமதிக்காமல் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.ஆகவே நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்ற சிக்கலுக்கு தீர்வு கண்டால் நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை எம்மால் நடத்த முடியும். தேர்தல் பணிக்கு நிதி நெருக்கடி ஏதும் கிடையாது ஏனெனில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
![]()