இலங்கை

மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்!

மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூட உள்ளது. இதன் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

இது குறித்து மேலும் தெளிவுப்படுத்துகையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது மாகாணசபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை அரச தரப்பு வெளியிட உள்ளது. மறுபுறம் மாகாணசபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறித்த குழுவுக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரைகளில் தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளது.

அத்துடன் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடி இருந்தார். இந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருடத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவுப்பெறுகின்றது. அந்த வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையை பொறுத்த வரையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. மறுபுறம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தல் விடயத்தில் அநாவசியமான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *