ரணிலின் மரணப் பொறிக்குள் அரசாங்கம் சிக்குண்டுள்ளது; வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட மரணப் பொறியில் அரசாங்கம் சிக்குண்டுள்ளது.அதனால்தன அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய கையிருப்பில் இருந்த எரிபொருளுக்கு விலை அதிகரித்துள்ளது என ஜனநாயக இடது முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்கா,இஸ்ரேலின் தேவைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யுத்தத்தால் எமது நாடு மாத்திரமல்லாது, முழு உலகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை அதிகரிப்பு அரசாங்கம் மேண்டுமென்று மேற்கொண்டதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
எனினும் அரசாங்கம் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எரிபொருட்களுக்காக அறவிடப்படும் வரியை நீக்கி அல்லது குறைத்து ஏன் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இன்று மக்கள் கேட்கின்றனர். அதனால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முடியுமான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லாது விட்டால் இந்த அரசாங்கமும் டொனால் ட்ரம் மற்றும் நெதன்யாஹுவின் பங்காளிகள் என மக்கள் கருதுவார்கள்
எரிபொருட்கள் விலை அதிகரிக்க அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரண ம். அதனால் டொனால் ட்ரம் மற்றும் நெதன்யாஹு இருவரையுமே மக்கள் சபிக்க வேண்டும். என்றாலும் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. நாட்டின் ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என்றே மக்கள் பார்க்கின்றனர். அதநேரம் தற்போதுள்ள நிலையில் இந்தியாவிலோ தெற்காசியாவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவு விலை அதிகரிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது இலங்கையில் மாத்திரம் ஏன் எரிபொருள், எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். அதனால் அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும்போது எமது நாட்டிலும் விலை அதிகரிக்கப்படுவது நியாயமானது.. என்றாலும் அரரசாங்கம் கையிருப்பில் இருந்த எரிபொருளுக்கே விலை அதிகரித்துள்ளது.. அதனால்தான் மக்கள் கோபமடைந்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கறுப்புக்கடை முதலாளிமார்களைப் போன்றதாகும். இந்த விலை அதிகரிப்பால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன. அதனால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேநேரம் எமது நாட்டில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களான லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினபோம் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகவே கையிருப்பில் இருக்கும் எரிபொருளுக்கு அரசாங்கம் விலை அதிகரிக்க தீர்மானித்தது. இது அரசாங்கம் விரும்பி எடுத்த தீர்மானம் அல்ல. மாறாக ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட மரணப்பொறியே காரணம். அந்த பொறியில் அரசாங்கம் சிக்குண்டுள்ளது. அதனால் அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய கையிருப்பில் இருந்த எரிபொருள் தொகைக்கு விலை அதிகரிக்க தீர்மானித்தது.
எனவே இவ்வாறான சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இருந்துகொண்டுதான் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு மிகவும் கஷ்டத்துடன் தீர்மானங்களை மேற்காெண்டு வருகிறது என்றார்.
![]()