இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விளம்பரம் செய்ய வேண்டும் – விமல் வீரவன்சவின் கிண்டல் பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில்   நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள மோதலுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் தான் எண்ணெய் கிணறு உரிமையாளரல்ல என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது அவரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிக்கும் எண்ணெய் கிணறுகள் இருக்கவில்லை. இருப்பினும் அவர்கள் ஏதாவதொரு வழியில் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஏற்றாட்போல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது. அரசியல் பழிவாங்கலுக்காக புலனாய்வு பிரிவினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.இது முற்றிலும் தவறானது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *