மத்திய கிழக்கில் நடக்கும் போர் அநுர அரசாங்கத்திற்கு வருமானம்; எரிபொருள் வரிகள் , கறுப்புச் சந்தை முதலாளிகள் மூலம் மேலதிகமாக 710 கோடி ரூபா இலாபம்

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இலங்கை அரசாங்கத்திற்கு வருமானமாக மாறுகின்றது . இந்தக் காலப்பகுதியில் எரிபொருள் வரிகள் மற்றும் கறுப்புச் சந்தை முதலாளிகள் மூலம் அரசாங்கம் மேலதிகமாக 710 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலைகள் உயர்வடைந்ததை தொடர்ந்து பொருட்களின் விலைகள் அதிகரித்தச் செல்கின்றன. இதன்மூலம் பண வீக்கமும் அதிகரிக்கும் நிலைமையே உள்ளது. வளைகுடா நாடுகளில் போர் நடக்கும் போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவது சாதாரண விடயமாக இருந்தாலும், கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் 40 நாட்களுக்கு இது போதுமானது என்றும், இன்னும் எரிபொருள் கப்பல்கள் வருகின்றன என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி நள்ளிவு முதல் எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டநா . இதனை நியாயப்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். போர் முடிவடையும் நாள் எதுவென அவர் கேள்வி கேட்பவர்களிடம் கேட்கின்றார். சாதாரண மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவரும் சாதாரண மக்கள் போன்று பதிலளிக்க முடியாது. உண்மையில் அவர் போர் எப்போது முடிவடையும் என்பதனை ஜூலி சங் மற்றும் நெதன்யாகுவிடமே கேட்க வேண்டும்.
இந்த அரசாங்கம் கறுப்பு சந்தை முதலாளிகள் போன்று நடந்துகொள்ளக் கூடாது. பழைய கையிருப்பை அதிக விலைக்கு விற்பனை செய்யும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்கின்றது. வரிகளை அறவிட்டு தொடர்ந்தும் சுரண்டித் தின்கின்றனர். அதற்கு ஓர் எல்லையில்லாமல் போய்விட்டது. போரை காட்டியும் வரிகளை அறவிடுகின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும் போது எரிபொருள் தொடர்பில் கூறிய விடயங்கள் வேறு ஆட்சிக்கு வந்த பின்னர் செய்வது வேறாக உள்ளது. இப்போது கறுப்புச் சந்தை முதலாளிகளுக்கு வாய்ப்பான வகையில் அரசாங்கம் நடந்துகொள்கின்றத. இது குற்றம். இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் .
மக்களுக்கான அரசாங்கம் என்று கூறிக்கொண்டு மக்களின் பணத்தை சுரண்டுகின்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் அரசாங்கத்திற்கு வருமானமாகவே இருக்கின்றது. இந்தப் போரை பயன்படுத்தி 710 கோடி ரூபா மேலதிக இ லாபத்தை அரசாங்கம் அநீதியான வரியில் பெற்றுக்கொள்கின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போதும் குறைவடையும் போதும் இங்கு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்ய அரசாங்கம் அவசியமா? என்று அநுரகுமார கூறினார். இப்போது அவரிடம் நாங்கள் இதனை கேட்க வேண்டும். அதாவது இதனை செய்வதற்கு நீங்கள் வேண்டுமா? என்று நாங்கள் கேட்க வேண்டும். அவரின் மொழியில் கூறுவதென்றால் புறக்கோட்டையில் உள்ள முதலாளி ஒருவரை கொண்டுவந்து அந்த ஆசனத்தில் அமர்த்தினால் செய்ய முடியும் என்று கூறலாம் என்றார்.
![]()