இலங்கை

உங்களினால் முடியாது விட்டால் நாட்டை புறக்கோட்டை முதலாளியிடம் கொடுங்கள்; ஜனதிபதிக்கு எதிர்க்கட்சி ஆலோசனை

அரசாங்கத்தினால் முடியாதுவிட்டால் புறக்கோட்டை முதலாளியொருவரிடம் நாட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு போகலாம். தற்போதைய அரசாங்கத்தை விடவும் அந்த முதலாளி நாட்டை நன்றாக நிர்வாகம் செய்வார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் எரிபொருள் இறக்குமதி தொடர்பிலும் அதற்கான வரிகள் தொடர்பிலும் பல்வேறு கதைகளைக் கூறி வந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறுபட்டதாகவே செயற்பாடுகள் நடக்கின்றன. அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட பின்னர் பெற்றோலியக் கூட்டுத்தாபனமே விலைகளை அதிகரிக்கின்றது என்றும் அரசாங்கம் அதனை செய்யவில்லை என்றும் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இது பொறுப்பற்ற கருத்து . அரசாங்கத்தின் ஆலோசனைக்கமையவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

இதேவேளை தனியார் துறையிடமே அதிகளவான எரிபொருள் கையிருப்பில் இருந்தது. அவர்களுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 700, 800 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபம் கிடைத்திருக்கும். இந்நிலையில் தன்னால் எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும், எரிபொருள் கிணறுகளின் சொந்தக்காரன் நான் அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த எண்ணெய் கிணறுகளின் சொந்தக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை . மக்களுக்கு நியாயமான வகையில் பணிகளை முன்னெடுக்கவே அரசாங்கமும் தலைவர்களும் நியமிக்கப்படுகிறது. அவர்களால் அதனை செய்ய முடியாவிட்டால் புறக்கோட்டை முதலாளியொருவரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு போனால் அந்த முதலாளி இதனை விடவும் நன்றாக நிர்வாகம் செய்வார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறிவற்றுக்கும் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியிலேயே இருக்கின்றனர். ஏதேனும் தேர்தலுக்கு இந்த அரசாங்கம் சென்றால் அதில் அரசாங்கத்திற்கு தோல்வியே கிடைக்கும். அரசாங்கம் வீழும் காலம் நெருங்குகின்றது. ஜனாதிபதியினால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார். இதன்படி கூடிய விரைவில் அரசாங்கம் வீட்டுக்கு செல்லும். மாகாண சபைகள் தேர்தலை நடத்தினால் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதனை அறிந்துகொள்ள முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button