இலங்கை

இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு ஜே.வி.பியேதான் முழுக் காரணம்! – போட்டுத் தாக்கும் ரணில்

சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசு ஓர் ‘ஊமையைப் போல்’ மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி. கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

“எண்ணெய் சேமிப்பு முறைகள் என்பது காலங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளவை. முதலில் அமெரிக்க நிறுவனங்களுடனும், பின்னர் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும் நாம் இவற்றை முன்னெடுத்து வந்தோம்.

2003 ஆம் ஆண்டில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க நான் முயற்சி செய்தேன். அன்றே அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலங்கைக்கு இன்று இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது. எண்ணெய் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அதனை எதிர்த்தது யார்? ஜே.வி.பிதான். அதனை எம்மால் மறக்க முடியாது.” – என்றும் சாடினார்.

மேலும், 2015ஆம் ஆண்டிலும் இத்திட்டம் ஜே.வி.பியால் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய விசாகப்பட்டினம் – இலங்கை இடையிலான எண்ணெய் குழாய் திட்டத்தையும் அநுரகுமார தலைமையிலான தரப்பினரே முடக்கினர் என்றும் தெரிவித்தார்.

“இந்தத் திட்டம் செயற்பாட்டில் இருந்திருந்தால், தற்போதைய நெருக்கடியின் போது நமக்கு உதவுவதை இந்தியா தனது கடமையாகக் கருதியிருக்கும்.

அதுமட்டுமன்றி, நாம் கொண்டு வந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களையும் இவர்கள் தடுத்தனர்.

தற்போதைய உலகச் சூழல் குறித்து இந்த அரசு மௌனம் காப்பது வியப்பாக உள்ளது. ஓர் ஊமையைப் போலச் செயற்படும் இந்த அரசு, குறைந்தபட்சம் ஈரானிய ஆன்மீகத் தலைவரின் படுகொலையையாவது கண்டித்திருக்க வேண்டும். ஒரு நாட்டின் அரசை மற்றொரு நாடு பலவந்தமாக அகற்றும் முறையை ஒருபோதும் ஏற்க முடியாது. இது ஒரு சுதந்திர நாட்டின் இருப்புத் தொடர்பான ஆழமான பிரச்சினையாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகைத் தனது விருப்பப்படி இயக்க முயற்சிக்கின்றார். இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ட்ரம்ப் நினைத்தார். சுவிட்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் இந்தச் செயல்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனத் தைரியமாகக் கூறியுள்ளன. ஆனால் இலங்கை அரசு இன்னும் ஒரு முறையான அறிக்கையை வெளியிடாமல், போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் கூறி நழுவுகின்றது. – என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *