தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிக்கின்றனர் – ரவிகரன் சுட்டிக்காட்டு!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் 08.03 2026இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது. பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது.
தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறு தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலநூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டும், வயது முதிர்வினாலும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத்தேடிவரும் எஞ்சியுள்ளபெற்றோரும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏனைய உறவினர்களும் தமது தொடர்பேராட்டத்தின் பத்தாவது வருடத்தின் தொடக்கநாளில் பாரிய ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இறுதிக்கட்ட வட்டுவாகல் பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து ஆரம்பித்து வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இறுதிக்கட்ட போரின்போது வட்டுவாகல் பகுதியில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்ததாகக்கூறப்படும் இடம்வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
வட்டுவாகல் பாலம் என்பது தமிழ் இனப்படுகொலையின் நினைவுச்சின்னமாகும். எனவேதான் அந்தப்பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்ததுடன், தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடம்வரையில் மேற்கொண்டனர்.
குறிப்பாக கொளுத்தும் வெய்யிலிலும் வயது முதிர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பெருமளவானவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் பெண்கள், சிறார்களும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றனர்.
இத்தகைய அவலநிலைகளை தாங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த உறவுகள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.
எனினும் கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வை வழங்கும் விவகாரத்தில் பாராமுகத்துடனேயே செயற்பட்டவந்தனர்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்குமாறு எம்மால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர் தாயகப்பரப்புக்களில் இடம்பெறும் நில அபகரிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்களுடன், இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்குதல் விடயத்திலும் மிகப்பிரதானமாக எம்மால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வழங்குவதற்கு இந்த ஆட்சியாளர்களும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் தற்போது உலகநாடுகளிடையே போர்மேகம் சூழ்ந்துள்ளது. மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. 2009இல் எம்மை அழிப்பதற்குத் துணைநின்றவர்கள் தங்களுக்கிடையில் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். எனினும் யுத்தத்தால் சிறார்கள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரும் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதென்பதே தமிழர்களின் நிலைப்பாடு. ஏன் எனில் தமிழர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள்.
ஆனால் 2009இல் திட்டமிட்டவகையில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டபகுதிக்குள்ளும் குண்டுபோட்டும், தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளைப்போட்டும் தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட ராஜபக்சக்களின் கூடாரத்தைச் சேரந்தவர்கள் தற்போது மத்திய கிழக்கில் இடம்பெறும் போர்ச்சூழலுக்கு அனுதாபதந் தெரிவிக்கின்றனர். தற்போது மனிதாபிமானத்தைப்பற்றி பேசுகின்றனர்.
இந்தநாடு முழுவதுமே தமிழர்களுடையது என, வரலாறுகள் கூறுகின்றன. இந்நிலையில் வடக்கும், கீழக்கும் பூர்வீக தமிழர் தாயகமென கோரிப் போராடியதும், தற்போதும் வடகிழக்குத்தான் தமிழர்தாயகம் எனக்கோருவதும் தமிழர்களின் பெருந்தன்மையாகும்.
இவ்வாறாக வடக்கு கிழக்குத் தமிழர்தாயகமென தமது உரித்துக்களைக் கோரியதற்காக தமிழர்கள்மீது திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டவர்கள், உறவினர்களால் கையளிக்கப்பட்டஉறவினர்களை காணமலாக்கிய கொடூரங்களைச்செய்த கொடூரர்கள் தற்போது உலகமகா நடிகர்களாக மாறி மனிதாபிமானிகளைப்போல நடிப்புத்திறன்களை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போதைய அரசு இந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வழங்கமுன்வரவேண்டும் எனவலியுறுத்திக் கேட்டுக்தொள்கின்றேன் – என்றார்.
![]()