இலங்கை

இலங்கை கடற்படைத் தளபதி அழைத்தே 3 கப்பல்களும் வந்தன; ஈரான் தூதரக உயர் அதிகாரி தகவல்

இலங்கை கடற்படைத் தளபதியின் அழைப்புக்கு அமையவே மூன்று ஈரான் கப்பல்களும் வந்துள்ளதாக ஈரான் தூதரக உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இவ்வாறு கடற்படை தளபதி அழைப்பு விடுத்தது உண்மையா? என்பதனை அவரிடம் கேட்குமாறும், அது அரசாங்கத்திற்கு தெரியாமல் விடுக்கப்பட்ட அழைப்பா என்று ஆராயுமாறும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது முஜிபூர் ரஹ்மான் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் அரசாங்கம் பெப்ரவரி 26ஆம் திகதி மூன்று கப்பல்கள் வரவுள்ளதாகவும், அதற்காக அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் ஏன் 6 நாட்களாக தீர்மானம் எடுக்கவில்லை. அரசாங்கத்தில் இருக்கும் நீங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் நிறம் மற்றும் பட்டனை அழுத்தியவர்கள் யார் என்றும் கூறியிருப்பீர்கள்.

தற்போது பாணந்துறை பகுதியில் நின்ற ஈரான் கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனை வரவேற்கின்றோம். இதனையே செய்ய வேண்டும். நாங்களும் கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுமானே கூறினோம். நாங்கள் ஈரானுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்துங்கள் என்று கூறவில்லை. இந்நிலையில் 26ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையில் தீர்மானம் எடுக்காமல் இருந்துள்ளனர். இப்போது அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஆனால் முன்னரே இந்த தீர்மானத்தை எடுத்திருந்தால் காலிக்கு அருகில் உயிரிழந்தவர்களின் உயிர்களையாவது பாதுகாத்திருக்கலாம்.

இதேவேளை ஈரான் தூதரக உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தி ஒரு விடயத்தை கூறியுள்ளார். அதாவது இலங்கை கடற்படைத் தளபதியின் அழைப்புக்கு அமையவே இந்த மூன்று கப்பல்களும் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். இந்த விடயம் தொடர்பில் கடற்படைத் தளபதியிடம் கேளுங்கள். அரசாங்கத்திற்கு தெரியாமலா கடற்படை தளபதி இந்த அழைப்பை விடுத்துள்ளாரா? என்பதனை தேடிப்பாருங்கள்.

அரசாங்கம் நடுநிலையான கொள்கையை வகிப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தொலைபேசியில் பேசும் போது ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் எவ்வாறு நடுநிலையான கொள்கையில் இருப்பதாக கூற முடியும். 165 சிறுவர்கள் உயிரிழந்தனர். அரச தலைவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வல்லரசு நாடுகளின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் இப்போது வேறு கொள்கையில் செயற்படுகின்றனர். இதில் உள்ள அரசியல் பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஈரானுக்கு எதிரான தாக்குதலை கண்டிக்க முடியாது என்றால் நீங்கள் இவ்வளவு காலம் உங்களின் அரசியல் இயக்கத்தினால் செய்தவை என்ன என்று கேட்க வேண்டியுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *