ஈரான் மீது தாக்குதல்; கண்டிப்பதற்கு தொடை நடுங்கும் அரசு!

அமெரிக்கா,இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை குருடர் போன்று பார்த்துக்கொண்டிருப்பதுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்த அமெரிக்காவை கண்டிப்பதற்கு எமது நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தொடை நடுங்குகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.உதுமாலெப்பை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அமெரிக்கா தனது இலக்குகளை அடைய ஜனநாயக நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்திருக்கிறது. அமெரிக்கா இதற்கு முன்னர் ஈராக்கில் தலையிட்டு அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து தூக்கிலிட்டது.லிபியாவில் தலையிட்டு மொஹமட் கடாபியை கொன்றார்கள் . வெனிசுலாவில் அத்துமீறி தலையிட்டு, அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து, அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறாக அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை குருடர்கள் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு எமது அரச தரப்பினர் அச்சப்படுகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பில் கதைப்பதாக இருந்தால் இவர்களின் தொடை நடுங்குகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தியவர்கள் .ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலைசெய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயலை கண்டிப்பதற்கு அச்சப்படுவதையிட்டு, முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது.
அதனால் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து, அமெரிக்காவின் இந்த படுகொலையை அரசாங்கம் கண்டிக்கவேண்டும் எனறார்.
![]()