இலங்கை

இலங்கையின் கடல் எல்லைக்குள் அமெரிக்க நீர்மூழ்கி நுழைந்ததா?; அரசு நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் 

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் மக்கள் விவகாரச் செயலாளருமான துமிந்த நாகமுவ வலியுறுத்தியுள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்ததா? என்ற பலமான சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

பாதுகாப்புப் பயிற்சிக்காக ஆசியக் கடற்பரப்பிற்கு வந்திருந்த ஈரானியக் கப்பல் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

“கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலங்களில் அமெரிக்காவுடன் ‘எட்கா’ போன்ற ஆபத்தான இராணுவ உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.

அதேபோன்று தற்போதைய அரசாங்கமும் அமெரிக்காவுடன் ‘SPP’ என்ற புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, அமெரிக்கா ஈடுபடும் எந்தவொரு போரிலும் நமது நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவமனை வசதிகளை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இது நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கும் செயலாகும்” என அவர் குற்றம் சாட்டினார்.

ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல், வெனிசுவேலா ஜனாதிபதி கடத்தல், கியூபா மீதான தடைகள் அல்லது காசா மீதான தாக்குதல்கள் குறித்து மௌனம் காக்கும் இலங்கை அரசாங்கம், சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியபோது மட்டும் கவலை தெரிவிப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவிற்கு இந்த அரசாங்கம் எவ்வளவு தூரம் அடிபணிந்து போயுள்ளது என்பதை இது காட்டுவதாகவும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *