6-வது நாளை எட்டிய போர்; ஈரானில் 1,000-த்தைத் தாண்டிய உயிரிழப்பு !

ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் மோதல் நேற்று வியாழக்கிழமை 6-வது நாளை எட்டியது. ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் புதிய தாக்குதலை நேற்று நடத்தியது.
ஈரான் மீதான தாக்குல் நேற்று 6-வது நாளை எட்டியது. நேற்று அதிகாலையிலேயே ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது.
அத்துடன் லெபனான் மீது புதிதாக இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்தனர். அதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கட்டார், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அத்துடன் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தங்கள் வான் பாதுகாப்பு கருவிகளை இயக்கி உள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எப்பி டெப்ரின் கூறுகையில்,”ஈரானில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மதத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஈரானின் குவாம் என்ற நகரில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்டிடத்தின் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இதில் ஏற்பட்ட சேதம் குறித்து எங்கள் ராணுவத்தினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்” என்றார்.
இதற்கிடையில், அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெறவில்லை என்று ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை எங்களுக்கு உள்ளது. எங்களுடைய அணுசக்தி திட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் தாக்குதல் தீவிரமாகத் தொடரும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளது.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 2 ட்ரோன்கள் தாக்கியதில் சேதம் அடைந்தது என்று சவுதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் டுபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பகுதியில் ஈரானின் ட்ரோன்கள் தாக்கின. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள், குடும்பத்தினர் உடனடியாக வெளியேறும் படி அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
![]()