ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி வீதியில் இறங்கிய பேராயர் இன்று எங்கே? – மொட்டுக் கட்சி விமர்சனம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது மௌனம் காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் நடத்தியது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முப்பது வருட காலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரைக் கொண்ட எமது கட்சிக்கு, குண்டுகளை வைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கிடையாது.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிந்து கைது செய்வோம் என்று தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் முழக்கமிட்டனர். தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
எமது ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியில் இறங்கிப் போராடினார். ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு அவர் மௌனமாக இருக்கின்றார். பேராயர் மீண்டும் வீதிக்கு வந்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு இந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி விசாரணைகளைத் தீவிரப்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை அரசு வெளிப்படுத்த வேண்டும். – என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()