பாதிக்கப்பட்டவர்களுடன் கத்தோலிக்க சபையை ஏமாற்றவே சலே கைது!

கத்தோலிக்க சபையையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காகவே புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை போராயர், கத்தோலிக்க சபை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். தற்போது நாட்டில் விவசாயிகள் அரசாங்கத்திற்கு சாபமிடுகின்றனர். நிலக்கரி மேசாடியில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் நிலையில் மக்களின் அவதானத்தை திசை திருப்ப ஏமாற்று வேலைகளை செய்கின்றனர்.
சலேயை கைது செய்தமைக்கான காரணம் தெரியாது என்று பொலிஸ் பேச்சாளர் கூறுகின்றார். ஆனால் நாங்கள் அறிந்த காரணம் என்னவென்றால் அசாத் மௌலானா என்பவர் சனல் 4 ஊடகத்திற்கு கூறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவரை கைது செய்திருக்கலாம்.
சுரேஷ் சலே 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையில் மலேசியா தூதரகத்திலேயே பணியாற்றினார். அதன் பின்னர் 2019 ஜனவரி 3ஆம் திகதி டிசம்பர் வரையில் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியிலேயே இருந்தார். இவர் நாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் எப்படி இந்த காலப்பகுதியில் சஹ்ரானை சந்தித்திருக்க முடியும். மௌலானவின் முன்னால் கலந்துரையாடியிருக்கவும் தேவையில்லை.
நாட்டுக்கு சிறந்த சேவையை செய்த இவரை கைது செய்தமைக்கான வேறு காரணம் இருந்தால் அதனை நாட்டுக்கு வெளியிட வேண்டும்.
தாக்குதலை நடத்திய குண்டுதாரிகளின் குடும்பத்தை சேர்ந்த இப்ராஹிம் வெளியில் இருக்கின்றார். சலே உள்ளே இருக்கின்றார். இதன் பிரதான சூத்திரதாரி நௌபர் மெளலவியே ஆகும். சர்வதேச விசாரணைகளுக்கு உள்ளான சம்பவமே இது. இதன்போது இது ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினால் நடத்திய தாக்குதல் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலைமையில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் சலேயை கைது செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
![]()