பலதும் பத்தும்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 153 ஆண்டுகளில் முதல் முறை அச்சுப்பணியை நிறுத்திய நாளிதழ்

அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக 153 ஆண்டுகால வரலாறு கொண்ட பொஸ்டன் க்ளோப் பத்திரிகை முதல் முறையாக தனது தினசரி செய்தித்தாள் வெளியீட்டுப் பணியை நிறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் பொஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்புயல் அனர்த்த நிலைமை மோசமாகி வருகிறது.

குறிப்பாக, பொஸ்டன் க்ளோப் பத்திரிகை நிறுவனம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டலில் 2 அடி உயரத்துக்கு பனி மூடியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (23) இரவு வரை 81 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி குவிந்துள்ளதாக அங்குள்ள தேசிய வானிலை சேவை நிலையம் குறிப்பிடுகிறது.

பனிப்புயலால் குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், நாளிதழை அச்சிட்டு வெளியிடுவதில் கடினமான சூழ்நிலையை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருவதால் நாளிதழை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் வெளியிடப்படும் பிரபலமான தி பொஸ்டன் க்ளோப் நாளிதழ் 1872இல் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இணையத்தின் வளர்ச்சி காரணமாக செய்தித்தாள்களை வாசகர்கள் வாசிப்பது குறைந்துவிட்ட நிலைமை அமெரிக்காவிலும் அதிகரித்துக் காணப்படுகிறது.

Pew ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) 2025ஆம் ஆண்டு கணிப்பின்படி, அமெரிக்காவில் வளர்ந்தவர்களில் 7 வீதமானோர் மட்டுமே செய்தித்தாளை வாங்கி செய்திகளை அறிபவர்களாகவும் 56 வீதமானோர் ஸ்மார்ட்போன், கணினி, டெப்லெட் முதலிய சாதனங்களின் ஊடாக செய்திகளை அறிந்துகொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *