இலங்கை

நிலக்கரி மோசடியை தவிர்க்க சலேயின் கைதின் பின்னணியில் சதி!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலேவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது என்றும், ஆனால் தற்போது அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் நிலக்கரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காகவே அவரை முன்கூட்டியே அரசாங்கம் கைது செய்துள்ளது என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூறி அப்பாவிகளை தண்டித்து, பிரதான சூத்திரதாரி என்ற நாடகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க தீர்மானம் மிக்க பணியை செய்த இராணுவ வீரராவார். இதனால் இவரை பழிவாங்குவதற்கு பிரிவினைவாத சக்திகளுக்கு நோக்கங்கள் இருந்தன. 2023இல் சனல் 4 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென்ற கதையை உருவாக்கியது அவரை பழிவாங்குவதற்காகவே ஆகும். அதனை பயன்படுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை பெயரிடுவதற்கான அழுத்தத்தில் அரசாங்கம் இருக்கின்றது.

இதனால் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேயை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே கைது செய்யவே திட்டமிடப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க நியமித்த இமாம் குழுவின் அறிக்கை வெளிவந்ததும் அது பொய்யென தகவல்கள் சமூகத்தில் வெளியாக இருந்த நிலையில், ஜனாதிபதியினால் அந்த அறிக்கை மறைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் நான் கேள்வியெழுப்பிய போது அதனை தவிர்த்தனர்.

எவ்வாறாயினும் பிரதான சூத்திரதாரி கதை மீண்டும் ஏப்ரலில் வெளிவரும். இதன்படி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பிள்ளையானை கைது செய்ததை போன்று இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் சுரேஷ் சலேயை கைது செய்வதற்கே அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுரேஷ் சலேயின் கைதை முன்னரே மேற்கொள்வதற்கு, தற்போது நிலக்கரி மோசடி தொடர்பான மக்களின் அவதானத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பவே ஆகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் பிரதான சூத்திரதாரியை உருவாக்கி அப்பாவிகளை தண்டிக்க முயற்சித்தால் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சி முன்வரும். எவ்வாறாயினும் அநீதியான வகையில் எவர் மீதாவது பழி சுமத்தி பிரதான சூத்திரதாரி நாடகத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *