உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே திடீர் கைது

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இவர் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று புதன்கிழமை அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கொழும்பு பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2009 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளிட்ட 273 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
இது தொடர்பில் பல்வேறு மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய குழுக்களுடன் தொடர்புகளை பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவங்கின் பின்னால் அரசியல் தொடர்புகள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் 2023 செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன்போது, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சஹ்ரான் குழுவினரிடையே இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்பில் இரகசியமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுரேஷ் சலேவை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த கைது தொடர்பில் பொலிஸாரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த கூறுகையில்,
சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட காரணங்கள் தொடர்பில் உடனடியாக கூற முடியாது, தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் அது தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். கைது செய்யப்பட்டவர் தடுப்புக் காவலில் இருப்பார். இவர் அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக இருந்தவர் என்பதனால் இவரிடம் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகலாம். பிரதான சூத்திரதாரி தொடர்பிலும் தெரியவரலாம் என்றார்.
![]()