பலதும் பத்தும்

தாய்லாந்து பூங்காவில் இரு வாரங்களில் 72 புலிகள் மர்ம மரணம்

தாய்லாந்தின் வடபகுதியிலுள்ள சுற்றுலா மையமான சியாங் மாயில், இரண்டு வாரங்களுக்குள் 72 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சுற்றுலாத் தலமான ‘டைகர் கிங்டம்’ பூங்காவிலேயே புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த புலிகளின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவற்றுக்கு கனைன் டிஸ்டெம்பர் எனும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் விலங்குகளின் சுவாச மண்டலம், இரைப்பை மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாகத் தாக்கும் வல்லமை கொண்டது. பொதுவாக இது நாய்களிடம் காணப்பட்டாலும், புலிகள் போன்ற பெரிய பூனை இனத் தகி விலங்குகளையும் இது உயிரிழக்கும் அளவிற்கு பாதிக்கும்.

இந்நிலையில் புலிகள் நோய்வாய்ப்படுவதை கண்டறிவது பூனைகள் அல்லது நாய்களை விட கடினம் என்பதால், சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ‘டைகர் கிங்டம்’ பூங்கா இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், கிருமி நீக்கப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பூங்காவில் பணிபுரிந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை என்றாலும், அவர்கள் 21 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 72 புலிகளின் உடல்களும் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதிப்படுத்தினர்.

அதேவேளை முன்னர் 2004 ஆம் ஆண்டு சோன்புரி மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 150 புலிகள் உயிரிழந்தன. அப்போது புலிகளுக்கு வழங்கப்பட்ட பச்சை கோழி இறைச்சி மூலம் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

தற்போதும் அதே போன்ற ஒரு சந்தேகம் அதிகாரிகளிடையே எழுந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக புலிகளை அடைத்து வைத்திருக்கும் இவ்வாறான பூங்காக்களின் மோசமான வாழ்விடச் சூழலே இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணம் என விலங்கு நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *