பாராளுமன்ற உறுப்பினர் நாமலுக்குத் தடை; அலி சப்ரி கவலை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ள இருந்த ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட அரசியல் அழுத்தங்களினால் திரும்பப் பெற வேண்டியிருந்தது வருந்தத்தக்கது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) போன்ற விவாத அரங்குகள், தலைமுறை தலைமுறையாக அச்சமற்ற உரையாடல்களுக்கும், பகுத்தறிவுமிக்க வாதங்கள் மூலம் கருத்துக்களைப் பரிட்சை செய்து பார்ப்பதற்குமான அடையாளங்களாகத் திகழ்ந்து வருகின்றன. கேம்பிரிட்ஜ் யூனியனில் உரையாற்றும் பாக்கியத்தைப் பெற்றவன் என்ற ரீதியில், இத்தகைய தளங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகவும், மரியாதையுடனும், அறிவுசார் நேர்மையுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்பதை நான் அறிவேன்.
எனவே, அதே பாரம்பரியத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட ஓர் அழைப்பு, திட்டமிடப்பட்ட அரசியல் அழுத்தங்களினால் திரும்பப் பெற வேண்டியிருந்தது வருந்தத்தக்கது. உரையாடல்களுக்குப் பதிலாக இடையூறுகளும், ஈடுபாடுகளுக்குப் பதிலாகப் புறக்கணிப்புகளும் இடம்பெறும்போது, பிளவுகளைக் குறைப்பதற்கும் ஆக்கபூர்வமான முறையில் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்துவதற்குமான மதிப்புமிக்க வாய்ப்புகளை நாம் இழக்கிறோம்.
இலங்கையின் எதிர்காலமும் உண்மையான நல்லிணக்கமும், ஒருதரப்பு கருத்துக்கள் மட்டுமே எதிரொலிக்கும் அறைகளினாலோ அல்லது உரையாட மறுப்பதன் மூலமோ கட்டியெழுப்பப்பட முடியாது. ஆழமான மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் கூட, ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் கேள்வி கேட்கவும், செவிமடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்தை மேம்படுத்தாது; அது பல்கலைக்கழகங்கள் எதைப் போற்ற வேண்டுமோ அந்த உயரிய இலட்சியங்களையே சிதைத்துவிடும்.
இத்தகைய தளங்கள் அச்சுறுத்தலுக்கான போர்க்களங்களாக மாறாமல் விவாதங்களுக்கான களங்களாகத் தொடர்ந்தும் நீடிக்கும் என்றும், நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த அர்த்தமுள்ள உரையாடல்கள் முதிர்ச்சியுடனும் மரியாதையுடனும் தொடர்ந்து நடைபெறும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()