இலங்கை

புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம்; நாமல் கொதிப்பு!

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, “தெற்கிலுள்ள பௌத்தர்கள் அநுராதபுரத்தைக் கடந்து சென்று மத வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது .

அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதியே இவ்வாறான கொள்கைகளை கொண்டிருக்கும் நிலையில், நாம் இலங்கையின் தேசிய கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம்மை வர வேண்டாம் எனச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?” எனவும் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ச ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன.

இதனையடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச விரிவுரை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *