இலங்கை

திருகோணமலை கடற்கரை: சர்ச்சைக்குரிய சட்டவிரோத கட்டடம் அகற்றப்பட்டது!

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச் பே (Dutch Bay) கடற்கரையோரமாக, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரை வளாகத்தினுள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலை கட்டிடம் அகற்றப்பட்டு, தற்போது தற்காலிக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பின்னணி மற்றும் விதிமீறல்கள்:
ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக, 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும், அந்த அனுமதியை மீறி 405 சதுர அடி பரப்பளவிலான நிரந்தரக் கட்டிடம், மூன்று மேலதிக குடிசைகள் மற்றும் நிரந்தர வேலி என்பன சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தன. இதனை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

சர்ச்சைகளும் வழக்கு விசாரணைகளும்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் கட்டுமானங்களை அகற்ற முற்பட்டபோது, விகாராதிபதி ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் குறித்த பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு, இவ்விடயம் மத ரீதியான சர்ச்சையாக மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகத் திருகோணமலை நகரசபையினால் திருகோணமலை நீதிமன்றிலும், பின்னர் விகாராதிபதியால் கொழும்பு நீதிமன்றிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற இணக்கப்பாடு:
கொழும்பு நீதிமன்றில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு தொடர்பாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை (18) இரவு முதல் சட்டவிரோத நிரந்தரக் கட்டுமானங்கள் அகற்றும் பணி தொடங்கியது.

நேற்று வெள்ளிக்கிழமை (20.02.2026) இந்த வழக்கு மீண்டும் கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையிலேயே, அத்துமீறிய கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, கரையோர பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய தற்காலிக அனுமதிக்கு உட்பட்ட வகையில் தற்போது கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *