போதைப் பொருட்களைப் புகுத்தும் இலக்கு வடக்கு ,கிழக்கு சீரழிந்தது முழு நாடும் !

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் திட்டமிட்ட முறையில் வடக்கு, கிழக்கில் இளைஞர்களை இலக்கு வைத்து புகுத்தப்பட்ட போதைப் பொருள்கள் இப்போது நாடு முழுவதும் வியாபித்து நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நீதித்துறை திருத்தச் சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபீன் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சிறீநாத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் திட்டமிட்ட முறையில் வடக்கு, கிழக்கில் இளைஞர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போதைப் பொருள் பாவனை இன்று நாடு முழுவதும் அதிகளவில் வியாபித்து நாட்டை சீரழிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த போதைப் பொருள் இளம்தலைமுறையினரை மிகவும் பாதிக்கின்றது. 2024ஆம் ஆண்டின் புள்ளிவிபர அறிக்கையின்படி 2 இலட்சத்து 28ஆயிரத்து 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 68 ஆயிரம் பேர் ஐஸ் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களே. அத்துடன் இவர்களில் அதிகமானவர்கள் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாகும். கைது செய்யப்பட்டவர்கள் இந்தளவில் இருந்தால், கைது செய்யப்படாமல் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இருக்கலாம் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
நகரங்களிலும் போதைப் பொருள் கடத்தப்படும் கடற்கரை கிராமங்களிலும் இந்த போதைப் பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அத்துடன் சட்டவிரோத மதுபாவனையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அப்பாவி மக்களின் பணத்தை உரிஞ்சும் செயற்பாடாக இது இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த போதுமான சட்டம் இல்லை. இதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் சம்பாதிக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்து இருக்கின்றன. இதனால் சமூகத்தில் போதைப்பொருளில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்காக போதுமான வேலைத்திட்டங்கள் இல்லாமல் இருக்கின்றன. அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()