உலகம்

Indian Dog… நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ ; இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகிலுள்ள கீலாங் (Geelong) பகுதியில், 22 வயது மதிக்கத்தக்க ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) என்ற சீக்கிய இளைஞர் கொடூரமான இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கீலாங் (Geelong) பகுதியில் ஜிம் (Gym) ஒன்றிற்கு வெளியே நடந்த இந்தத் தாக்குதலில் அவரது மூக்கு உடைக்கப்பட்டதுடன், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (பிப்ரவரி 17, 2026), ஹர்மன்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்துவிட்டு ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, அங்கு மூன்று பேர் கொண்ட கும்பல் காத்திருந்தது. அவர்கள் ஹர்மன்பிரீத்தை வழிமறித்து, “இந்திய நாய்” (Indian Dog) என்றும், “நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ” (Go back to where you came from) என்றும் ஆபாசமாகத் திட்டியுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பலில் இருந்த ஒருவன் தனது தலையால் ஹர்மன்பிரீத்தின் மூக்கில் மிகக் கடுமையாக மோதியதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தக் கும்பல் காரில் தப்பியோடியது.

காயமடைந்த ஹர்மன்பிரீத் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து செவிலியராகப் பணியாற்றும் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,

“யாரும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்க விரும்புவதில்லை. குறிப்பாக நாம் நமது வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கும்போது இது போன்ற தாக்குதல்கள் நடப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. ஆஸ்திரேலியாவில் நான் இனவெறியை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல, ஆனால் இது போன்ற உடல்ரீதியான தாக்குதல் என் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக இந்திய வம்சாவளியினர் மற்றும் சீக்கிய சமூகத்தினர் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *