இலங்கை

இந்தியாவை எதிர்த்ததால் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு; இன்று நண்பனாக்கியுள்ளனர் -சுஜீவ சேனசிங்க 

இந்தியாவை எதிரியாகப் பார்த்த ஜே .வி.பி.பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இன்று இந்தியாவை நண்பனாக்கியுள்ளார்.ஜனாதிபதியும் தற்போது இந்தியாவுடன் நெருங்கிய நண்பராகவே உள்ளார் எனத்தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சுஜீவ சேனசிங்க,சட்டம் அனைவருக்கும் சமம் என்றார்கள் அப்படியானால் ஏன் இதுவரையில் மஹிந்த, கோத்தா , பசில் ஆகியோர் கைது செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய

அவர் மேலும் பேசுகையில்,

ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளுக்கு செல்கிறார். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் விமானத்தில் முதல் தர வகுப்பில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தில்தான் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக அமுல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது.ஆனால் இன்று உண்மையில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகிறதா?, இல்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. மஹிந்த, கோத்தா , பசில் ஆகியோர் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிட முடியும்?

போராட்டங்களினால் நாடு பின்னோக்கிச் செல்லும் என்று அரசாங்கம் தற்போது குறிப்பிடுகிறது. யார் கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்டை சீரழித்தது?ஜே.வி.பி. தான் கடந்த காலங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது.

ஜே.வி.பி.பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்திய எதிர்ப்புக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டார். இதனால் 60 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தார்கள். ஆனால் இன்று அவர் இந்தியாவை நெருங்கிய நண்பனாக்கியுள்ளார். ஜனாதிபதி தற்போது இந்தியாவுடன் நெருங்கிய நண்பராகவே உள்ளார். இவர்களின் அரசியல் கொள்கை கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது. ஆனால் மக்கள்தான் ஏமாற்றமடைந்துள்ளார்கள் .ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *