மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசின் செல்வாக்கை மக்கள் தீர்மானிப்பர்

மாகாண சபைகள் தேர்தலை நடத்தினால் இப்போது அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள முடியுமென்றும், இதனால் அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடல் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் ஐந்து நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர. அவர்களை சந்திக்க நான் சென்றிருந்த போது அவர்கள் தமது பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தில் பொறுப்பானவர்களுடன் கதைக்குமாறு கூறினர். இதன்படி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் எனது தொலைபேசியில் பேச முயற்சித்தேன் அது முடியாமல் போனது. ஆனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரின் தொலைபேசியிலேயே நான் பேசினேன். சபை முதல்வரோ அவ்வாறாக நான் கதைக்கவில்லை என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும் நான் அமைச்சருடன் கதைத்தது உண்மையே. எங்களுக்கு அவ்வாறு ஒழித்து மறைத்து பேச வேண்டிய அவசியம் கிடையாது. கரைவலை தொழிலாளர் கடற்பாரைகள் சேதமடைவதாக கூறுகின்றனர். அவ்வாறு நடக்குமா? முதலில் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குங்கள்.
சிலர் இது நிரந்தரமாக கிடைத்த அதிகாரம் என்றும், இது கல்லில் பதியப்பட்டதை போன்று நிரந்தரமானது என்று நினைக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது. இது தற்காலிகமானது. வரலாற்றை எடுத்துப்பாருங்கள் அதிகாரங்கள் தற்காலிகமானது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதிகாரம் இல்லாமல் போகும் போது மக்கள் எங்களை சில்லரையாகவே கவனித்தனர். ஆனால் உங்களை மொத்தமாக கவனிப்பர். நீங்கள் மக்ககளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
இப்போது நாமலே அரசாங்கத்தின் கனவில் தெரிகின்றார். எப்படியாவது அவரை உள்ளே போட வேண்டும் என்றே நினைக்கின்றனர். உள்ளே போடவும் வெளியில் எடுக்கவுமா அரசாங்கம் இருக்கின்றது. அரசியல் பழிவாங்கலுக்கு முயற்சிக்க வேண்டாம். அது நல்லதல்ல. நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம், அரச ஊழியர்களின் ஆசீர்வாதம் என்பன கிடைத்தன. ஆனால் மகா சங்கத் தேரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக 20ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளனர். விவசாயிகள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைகின்றனர். இவ்வாறு ஏன் நடக்கின்றது என்று பார்த்து எங்கே பிழை ஏற்பட்டுள்ளது என்று ஆராயுங்கள்.
2024 செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றியின் போது இருந்த மக்கள் செல்வாக்கு இருக்கின்றதா என்று தேடிப்பாருங்கள். வீதிக்கு இறங்கி பாருங்கள். நாடு முழுவதும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. நீங்கள் மக்கள் கருத்துக்களுக்கு செவிசாய்த்து நடந்துகொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றரை வருடம் கழிந்துள்ள நிலையில் உங்கள் நிலை எப்படி இருக்கின்றது என்று மாகாண சபைகள் தேர்தலை நடத்தி பாருங்கள். மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தேர்தலை நடத்துங்கள். எதிர்க்கட்சியாகிய நாங்களும் அதற்கு தயாராகவே இருக்கின்றோம் ஏன்றார்.
![]()