இலங்கை

அநுரகுமார சிங்கள ஜனாதிபதி அல்ல; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜனாதிபதியை எவரும் சிங்கள ஜனாதிபதி என்று குறிப்பிடவில்லை. வடக்கு,கிழக்கு உட்பட மலையக தமிழ் மக்கள் ‘எமது ஜனாதிபதி’ என்றே ஜனாதிபதியை அன்புடன் அழைக்கிறார்கள். இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களாக 5 ஆண்டுகள் பதவி வகித்ததன் பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தவறானது என்று மக்கள் கூறுகின்றனர் . மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் ‘ கொண்டு வந்துள்ளோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பாட்டார்கள். அவர்கள் அரச நிதியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர் .

பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் விடயதானத்துக்கு உட்பட்ட வகையில் சபையில் உரையாற்றுகிறார்கள். ஒருசிலர் மிகவும் கீழ்த்தரமான வகையில் உரையாற்றுகிறார்கள். ஊடகங்களில் செய்தி வெளியாக வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம் என்ற நிலையில் செயற்படுகிறார்கள்.பாராளுமன்றத்துக்கு வெளியில் பொய்யுரைத்தால் சிறை செல்ல நேரிடும் என்பதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பொய் பேசுகின்றனர்.

அரசியல் மாற்றத்துக்காக இந்த ஒருவருட காலத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளோம். அதற்கமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதிகளின் உரித்துக்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச நிறுவனங்களும், தேசிய நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்,எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றச்சாட்டுக்களை முன்வைக் கிறார்கள். எங்கேயாவது போராட்டம் இடம் பெற்றால் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் அங்கு சென்று அமர்ந்து விடுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுக்கு மாத்திரம் 3 கோடியே 44 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது நியாயமற்றது.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அதேசமயத்தில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். ஜனாதிபதியை எவரும் சிங்கள ஜனாதிபதி என்று குறிப்பிடவில்லை. வடக்கு ,கிழக்கு உட்பட மலையக மக்கள் ‘எமது ஜனாதிபதி’ என்றே ஜனாதிபதியை அன்புடன் அழைக்கிறார்கள்.இந்த முன்னேற்றம் மற்றும் மாற்றம் எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரிவதில்லை.

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளோம். விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கட்டும். மக்களிடம் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படாது. ஆனால் மக்களின் நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகளிடம் நாங்கள்தான்தோன்றித்தனமாகவே செயற்படுவோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *