இலங்கை

முன்னாள் எம்.பி.க்கள் ஜனாதிபதிகளுக்கான இரு ஓய்வூதியத்தை பெறும் மகிந்த, மைத்திரி, ரணில்; அநுரகுமார பெறுவதில்லை

முன்னாள் ஜனாதிபதிகளாக மகிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினனர்களுக்கான ஓய்வூதியத்தையும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தையும் பெறுபவர்களாக இருக்கின்றனர் என்றும், ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதில்லை என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓய்வூதியம் இல்லாவிட்டால் ஊழல் மோசடிகள் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அப்படியென்றால் நாட்டில் பெரும்பாலான மக்கள் ஓய்வூதியம் பெறுவதில்லை. அவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்று கூறுவதா? சட்டத்தை இயற்றும் இடத்தில் தமக்கு ஏற்றால் போன்று சட்டத்தை தயாரித்துகொண்டுள்ளனர். இது தொடர்பில் மக்கள் அதிருப்தி நிலைமையில் இருக்கின்றனர். எமது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அரசியல் தொடர்பான கௌரவத்தை ஏற்படுத்தி வருகின்றோம். அதில் ஒரு அங்கமே ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கை உள்ளது. மக்களிடையே இப்போது அரசியல் மீதான கௌரவம் அதிகரிக்கின்றது. இது பழிவாங்கும் செயற்பாடு அல்ல.

ஓய்வூதியம் இல்லாமையினால் வறுமையாக இருப்பவர்கள் யார்? இன்றில் இருந்து கடந்த காலங்களில் ஓய்வூதியம் பெற்றவர்கள் அதனை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி ஒய்வூதியத்தை நீக்க வேண்டும். அதனை அரசியலமைப்பின் ஊடாக மட்டுமே நீக்க முடியும். ஆனால் கோதாபய ராஜபக்‌ஷ தவிர்ந்த அனைவரும் இந்த பாராளுமன்றத்தில் எம்.பிக்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு ஜனாதிபதி ஓய்வூதியமும் கிடைக்கும், எம்.பிக்கான ஓய்வூதியமும் கிடைக்கும். இதன்படி மகிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இரண்டு ஒய்வூதியத்தையும் பெறுகின்றனர். ஹேமா பிரேமதாசவும் அதனை பெறுகின்றார். ஆனால் ஜனாதிபதி பாராளுமன்ற ஒய்வூதியத்தை பெறுவதில்லை. அரசியலமைப்பு மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதிக்கான ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்படும்.

தற்போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணைகள் நடப்பவர்கள் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களே. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இன்றி வாழ முடியும். நாட்டில் அனைவரும் சிறந்த பொருளாதாரத்துடன் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *