இலங்கை

பாதாளக் குழுக்களின் நிர்வாகத்தில் நாடு!;  சந்தேகம் தெரிவிக்கும் அஜித் பெரேரா 

நாட்டை பாதாள குழுக்கள் நிர்வாகம் செய்வதை போன்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது என்றும், குற்றச்செயல்களை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எடுக்காமைக்கு தமது அதிருப்தியை வெளியிடுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொலை சம்பவங்கள் நடந்தால் உயிரிழந்தவர்கள் மீது ஏதாவது முத்திரையை குத்தி பொலிஸார் தப்பிக்கொள்கின்றனர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிப்போம் என்றே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் விசாரணைக்கு முன்னரே இறந்தவர்கள் மீது முத்திரை குத்தி தப்பிக்கொள்கின்றனர். சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டே பாதாள குழுத் தலைவர்கள் நாட்டில் குற்றச்செயல்களை வழிநடத்துகின்றனர். விலகிவிடுங்கள் என்று கூறினாலும் போதைப் பொருள் இல்லாமல் இல்லையா? எங்கேயாவது ஹெரோயின் தட்டுப்பாடு இருக்கின்றதா? எங்கேயாவது பாதாள குழுவினர் இல்லையா?

பாதாள குழுவை இல்லாமல் செய்வதாகவும், போதைப் பொருளை இல்லாமல் செய்வதாகவும் கூறியே ஆட்சிக்கு வந்தனர். அப்போது போன்றே இப்போதும் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன? முன்னரை போன்றே போதைப் பொருள் இருக்கின்றது. போதைப் பொருள் வர்த்தகர்கள் இந்த நாட்டை நிர்வாகம் செய்கின்றனர். அவர்கள் விருப்பமானவர்கள் வாழ்கின்றனர். பிடிக்காதவர்கள் கொல்லப்படுகின்றனர். பாதாள குழுவும் இருக்கின்றது. போதைப் பொருளும் இருக்கிறது. அநுரகுமாரவும் இருக்கின்றார்.

கடந்த தினங்களாக நடந்த கொலைச் சம்பவங்களை பார்க்கும் போது இந்த நாட்டை ஆட்சி செய்வதும், நாட்டின் சட்டவாட்சியின் பொறுப்பையும் கொண்டுள்ளது இந்த அரசாங்கம் அல்ல. வாழ வேண்டியவர்களும், கொல்லப்பட வேண்டியவர்களும் யார் என்று தீர்மானிப்பதும் பாதாள குழுவே ஆகும். இதனை கட்டுப்படுத்தும் தன்மை இந்த அரசாங்கத்திற்கு கிடையாது.

ஐக்கிய மக்கள் சக்தியென்ற ரீதியில் நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம். பாதாள குழுக்களின் செயற்பாடுகளில் உயிரிழந்த சகலருக்கும் எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் இந்த குற்றச் செயல்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமைக்கு நாங்கள் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்துகின்றோம். அதேபோன்று பொலிஸும் பலவீனமான நிறுவனமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறான நிலைமையிலேயே பாதாள குழுக்கள் அவர்களுக்கு ஏற்றால் போன்று செயற்படுகின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *