இலங்கை

அரகலய இளைஞர்களை தூக்கு மேடைக்குச் செல்லத் தூண்டியதே அநுர அரசுதான்

பொதுமக்களின் போராட்டங்களை (அரகலய) தூண்டியவர்கள் தற்போது அதிகாரத்தை அனுபவித்து வருவதாகவும், ஆனால் போராட்டத்தில் இணைந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சில குழுக்கள் இளைஞர்களைத் தங்களது அரசியல் இலக்குகளை அடைவதற்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், இளைஞர்களைப் பாதுகாப்பதாக ஊடகங்களில் வாக்குறுதி அளித்தவர்கள் இன்று அதிகாரத்தில் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும், போராட்டக்களத்திலிருந்த இளைஞர்கள் இறுதியில் “தூக்கு மேடைக்கே” சென்றதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும்போது, அரசாங்கம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அடக்குமுறையைப் பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய அரிசி வர்த்தகத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், முன்னதாக உள்நாட்டு விவசாயிகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட “அரிசி மாபியா” தற்போது அரிசி இறக்குமதியாளர்களுடன் கைகோர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை தொடர்பான அண்மைய நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட்டு நீதியை நிலைநாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான கொலையை சமூக வலைதளங்களில் சிலர் இன்னமும் நியாயப்படுத்த முயல்வது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போராட்ட இயக்கங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *