இலங்கை

வெளிநாட்டு நிதி எப்படி வந்தது? ; எமது ஆட்சியில் ‘அரகலய’ தொடர்பில் விசாரணை

தமது அரசாங்கம் உருவானதும் காலிமுகத்திடல் போராட்டம் (அரகலய) மற்றும் அதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்துவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2022 போராட்டக் காலத்தில் அதுகோரல எம்.பி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்பட்டள்ளது. எவ்வாறாயினும் உயிரை பலியெடுத்தமை மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியதை நியாயப்படுத்துபவர்களும் இருக்கின்றனர். 88/89 காலத்திற்கு அது பொருந்தும். இப்போது அவ்வாறு செய்ய முடியாது. இந்நாட்டின் இளைஞர்களை தூண்டிவிட்டு சொத்துக்களை அழித்து அதனூடாக ஆட்சியை கைப்பற்றியவர்கள் இப்போது கொலையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். 1980 காலத்தில் இருந்து இளைஞர்களை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சித்தவர்களே இவர்களாகும். இப்போதும் போராட்டத்தின் போர்வையில் அரசியல் தேவைகளை நிறைவேற்றவே முயற்சிக்கப்படுகின்றது. நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று இளைஞர்களை தூண்டிவிட்டனர். இப்போது இளைஞர்கள் தூக்கு மேடைக்கு போயுள்ளனர். இவர்களோ ஆட்சிக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ‘அரகலய’ போராட்டம் தொடர்பிலும் அதற்காக வந்த வெளிநாட்டு நிதி தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை அமைத்து ஆராய்வோம். இலங்கை, பங்காதேஷ் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றங்களுக்காக யு.எஸ்.ஏ.ஐ.டி. ஊடாக வெளிநாட்டு நிதி முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. இதனாலேயே போராட்டத்தில் இருந்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் தாம் வாகனங்கள், வீடுகள் வாங்கியமை தொடர்பில் கூறுகின்றனர். ஒரு பகுதியினர் இவ்வாறு அரசாட்சிக்கு வந்துள்ள நிலையில் இன்னுமொரு பகுதியினர் தூக்குமேடைக்கு போகின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *