இரகசிய உடன்படிக்கைகள் தயாராகி வருகின்றன இந்தியாவின் வலைக்குள் சிக்கியுள்ள ஜே.வி.பி; ரில்வின் சில்வாவின் இந்திய பயணம் இதற்காகவே என்கிறார் விமல்

இலங்கையின் கனிய வளங்களின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வகையில் இரகசியமாக உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் ஒரு அங்கமாகவே ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்திய பயணம் அமைந்துள்ளது என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வீரவன்ச இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டின் கனிய வளங்களின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை திருட்டுத் தனமாக இந்தியாவின் அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது அவசர அவசரமாக தயாரிக்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கை ஆவணத்தின் பிரதி எமக்கு கிடைத்துள்ளது. கூடிய விரைவில் அது கைச்சாத்திடப்படவுள்ளது. இங்குள்ள கனிய வளங்களை ஆராய்வு செய்யும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்த உடன்படிக்கைக்கு வசதியிளிப்பதற்காகவே ஆகும். இந்த துறையில் இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இந்த உடன்படிக்கை செய்ய திட்டமிடப்படுகின்றது.
எமது நிலத்தில் பல்வேறு வகையிலான பெருமளவிலான கனிய வளங்கள் உள்ளன. இவற்றின் பெறுமதி மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வாறான நிலைமையில் இது தொடர்பான நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கு ரில்வின் சில்வா போன்றவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதன்படியே அவர் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டு சென்ற கட்சி, அதற்காக போராட்டம் நடத்திய கட்சி இப்போது இந்தியாவுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சஜித் தரப்பினர் இவ்வாறு செய்திருந்தால் ஜே.வி.பியினர் அதற்கு எதிராக பேரணி சென்றிருப்பர். ஆனால் இப்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கின்றனர்.
இதேவேளை காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்திய மயமாக்கத் திட்டமிடப்படுகின்றது. அந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்தை 10 வருடங்களுக்கு தமது நிர்வாகத்தில் வைத்திருக்க திட்டமிடப்படுகின்றது. அத்துடன் திருகோணமலை துறைமுகத்தையும் தமக்கு கீழ் வைத்துக்கொள்ள திட்டமிடப்படுகின்றது. அதன்படியே இந்தியாவுக்கு ரில்வின் சில்வா செல்லவுள்ளார். 19ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயமாகவுள்ளார்.
தேசப்பற்று தொடர்பில் கதைத்தவர்கள் இப்போது தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவுக்கு ஏற்றால் போன்று இலங்கையை மாற்றியமைக்க தற்போது அநுரகுமாரவும், ரில்வின் சில்வாவும் இந்தியாவின் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.
![]()