ஒலிம்பிக் விளையாட்டில் பொய் கூறும் போட்டி என்றால் அநுரவுக்கே தங்கப் பதக்கம்

ஒலிம்பிக் விளையாட்டில் பொய் கூறும் போட்டி நடத்தப்படுமாக இருந்தால் அதில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொள்வார் என்பதுடன், வெள்ளி மற்றும் செப்பு பதக்கங்களை ஏனைய ஜே.வி.பியினர் பெற்றுக்கொள்வர். இவர்களுடன் போட்டியிட்டு உலகில் வேறு எந்த வீரராலும் வெற்றிப்பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகரே நான் பார்த்த வரலாற்றில் இருந்த மிகவும் கேவலமான சபாநாயகராவார். இதற்கு முன்னர் பல சபாநாயாகர்களை கண்டுள்ளோம். இவர்கள் தமது முதுகெலும்புடன் சுயாதீமாக செயற்பட்டதை காணலாம். ராஜபக்ஷக்களின் சபாநாயகராக சமர் ராஜபக்ஷ தற்போதைய சபாநாயகரை விடவும் சிறந்தவரே. தற்போதைய சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளராக இருந்தவரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். அவருக்கு எதிராக முறைப்பாடு இருக்குமாக இருந்தால் அவர் விசாரணைக்கு இடமளித்து பதவியில் இருந்து விலக வேண்டும். அனைவரும் சட்டத்தின் கீழ் சமமானவர்கள் என்றால் சபாநாயகர் மட்டும் எப்படி சட்டத்திற்கு மேல் இருக்க முடியும்.
தற்போது ஆட்சியில் இருக்கும் 159 பேரும் நாங்கள் நியாயமானவர்கள். சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூற முடியாது. அவர்களின் முதுகெலும்புகள் உடைந்துள்ளன. திருடமாட்டோம் என்று கூறினர். ஆனால் திருடுகின்றனர். சட்டத்திற்கு கீழ் இருப்பதாக கூறினர். ஆனால் சட்டத்தை மீறுகின்றனர்.
அதாவது ஒலிம்பிக்கில் பொய் கூறும் போட்டி நடத்தினால் அதில் ஜனாதிபதியே தங்கப் பதக்கத்தை வெல்வார். அத்துடன் வெள்ளி மற்றும் செப்பு பதக்கங்களை ஜே.வி.பியினர் பெற்றுக்கொள்வர். உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வீரருக்கும் பொய்கூறும் போட்டியில் இவர்களுடன் மோதி வெற்றிப்பெற முடியாது. முன்னர் கூறியதை மறந்ததை போன்றே இப்போது கதைக்கின்றனர் என்றார்.
![]()