இலங்கை

புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படும் அநுரவின் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது;  தேர்தலை நடத்தினால் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள் அமோக வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசாங்கம் இளைஞர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் இன்றளவில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்து விட்டோம் என்பதை இளைஞர்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று நினைப்பது முற்றிலும் தவறாகும். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள் இன்றும் சிறையில் உள்ளார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் எம்மை கைது செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே விசாரணை நடவடிக்கைகள் தாமதமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்ட நபர் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டுள்ளார்.இதற்கமைய பொலிஸ்மா அதிபர் ஊடாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. இது முற்றிலும் தவறானதாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *