மதத் தலைவர்களை அமைச்சர்கள் பகிரங்கமாக இழிவுபடுத்துகின்றனர்; பேராயர் மெல்கம் ரஞ்சித்

அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மதத் தலைவர்களைப் பகிரங்கமாக இழிவுபடுத்துவதையும், விமர்சிப்பதையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின ஆராதனையில் உரையாற்றிய அவர், இலங்கையின் கலாசாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“மஹிந்த தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்களே நமது நாட்டின் ஆன்மீகச் சிந்தனையை உருவாக்கியுள்ளன. இந்த விழுமியங்களின் கீழ் வளர்ந்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொதுவான பிரச்சினைகள் குறித்து மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலும், அவர்களை அவமதிக்கும் வகையிலும் சில அமைச்சர்கள் செயற்படுவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், இலங்கை தற்போது மிகவும் அபாயகரமான பொருளாதாரச் சூழலில் உள்ளதாகவும் அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளைத் தந்தாலும், யதார்த்த நிலை இன்னும் சீரடையவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்பது தார்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் அமையும் போதே சாத்தியமாகும். மதமற்ற, ஒழுக்கமற்ற பாதையில் சென்ற சில ஐரோப்பிய நாடுகள் அழிவைச் சந்தித்தன. நாமும் அந்த அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது என குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியலமைப்பு மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாகவே இலங்கையை அடையாளப்படுத்துகிறது.
மதச் சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் அரசியல் சித்தாந்தங்களுக்குள் மட்டும் முடங்கிக்கொண்டு சமூகத்தைக் கட்டியெழுப்ப முயற்சிப்பது, நாம் எதிர்பார்க்கும் சமூக அல்லது பொருளாதார முன்னேற்றத்தைத் தராது என்றும் கர்தினால் எச்சரித்துள்ளார்.
மதத் தலைவர்களின் கருத்துக்களை நாட்டின் முன்னேற்றத்திற்கான அளவுகோலாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
![]()