முச்சந்தி

‘இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம்’ ஜனாதிபதி தலைமையில் இன்று 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

‘இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், இந்த நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டம் மாற்றத்துடன் நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளதுடன், இதில் சுமார் 2000 அதிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலை நடைபெறவுள்ள சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து முற்பகல் 8.15 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கான முப்படையினரின் மரியாதை வணக்கம் செலுத்தும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி நாட்டுக்கு உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதன்படி இம்முறை அணிவகுப்பில் 1800 வரையிலான இராணுவத்தினரும், 750 வரையிலான கடற்படையினரும், 580 வரையிலான விமானப்படையினரும், 300 வரையிலான பொலிஸாரும், 200 வரையிலான விசேட அதிரடிப்படையினரும் அடங்களாக 4300 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எவ்வாறாயினும் வழமையாக கடந்த சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசியக் கொடியேற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் நிகழ்வு கடந்த முறையை போன்று இம்முறை நடத்தப்படாது.

ஆனால் முற்பகல் 11 மணியளவில் காலிமுகத்திடலில் கடற்படையினரால் மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அதிகாலை 5மணி முதல் விழா நிறைவடையும் வரை ஹோட்டன் சுற்றுவட்டம் முதல் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை வரையான பகுதிகள் உள்ளிட்ட பல வீதிகள் முழுமையாக மூடப்படும் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *