வட, கிழக்கில் இன்று கரி நாள் பேரணிகள்; மட்டு., கிளிநொச்சியில் அணிதிரளவுள்ள மக்கள்

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெருமெடுப்பில் கரி நாள் பேரணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கமும் இணைந்து குறித்த கரி நாள் பேரணியை வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடத்தவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் பேரணி டிப்போ சந்தியை சென்றடையும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை 11 மணிக்கு ஆரம்பித்து காந்தி பூங்கா வரை நடைபெறவுள்ளது.
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம், 1948 ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியான இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டே வருகின்றனர்.
பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை என ஒவ்வொரு விதமாக தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கிறது. இந்த அடக்குமுறைகள் தொடரும் வரை எமது போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எவ்வித பேதமுமின்றி கலந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அணிதிரள வேண்டும் – என்றனர்.
சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூக பிரதிநிதிகள் கடந்த வாரம் பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதான கட்சிகளான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கரி நாள் பேரணியில் பங்கேற்று வலுச்சேர்க்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கரி நாள் பேரணிக்கு மத தலைவர்கள், வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.
![]()