முகமாலைக்கு அப்பால் ஒரு வாக்கும் எடுக்காதவர்கள் எமக்கு பாடம்எடுப்பதா?; கஜேந்திரகுமாருக்கு சுமந்திரன் பதில்

வடக்கு கிழக்கில் நில அபகரிப்புகள் இடம்பெறும் போது வடக்கு கிழக்கை முழுவதும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி இலங்கை தமிழ் அரசுக் கட்சியே.எனவே முகமாலைக்கு அப்பால் ஒரு வாக்கும் எடுக்கத் தெரியாதவர்கள் எமக்கு அரசியல் பாடம் எடுக்கக் கூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்
கிவுல் ஓயா விவகாரம் தொடர்பான போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அரசியல் செய்யக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கட்சிகள்தான் அரசியல் செய்ய வேண்டும். அவருடைய அரசியல் கட்சிக்கு அரசியல் செய்ய வக்கில்லாது விட்டால் மற்றைய கட்சிகளுக்கு ஏன் இந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும்? அரசியல் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு பாடம் எடுக்க அவர் முயற்சிக்கும் ,அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? அரசியல் செய்வதற்குத் தான் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தான் மக்கள் விவகாரங்களை கையாள வேண்டும்.
வடக்கு கிழக்கில் இவ்வாறு நில அபகரிப்புகள் இடம்பெறும்போது வடக்கு கிழக்கை முழுவதும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே. ஆகவே மக்களின் பிரச்சினையை பேசக் கூடியது நாங்கள் தான்.
முகமாலைக்கு அப்பால் ஒரு வாக்கும் எடுக்க முடியாதவர்கள் எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்கக் கூடாது.
கஜேந்திரகுமார் சொன்னது போல நாங்கள் எதற்கும் துணை போகவில்லை. எதுவும் தெரியாமல் கதைக்கக் கூடாது. நாம் எல்லா காலத்திலும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவே செயல்பட்டோம் என்றார்.
![]()