என்னைக் கைது செய்யத் திட்டமா?; சி.ஐ.டி.யின் அழைப்பு தொடர்பில் நாமல்

கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தமையானது, ஜனவரியில் என்னை கைது செய்யவுள்ளதாக அமைச்சர் ஒருவர் ஏற்கனவே கூறியதன்படி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் அங்கமாக இருக்கலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.
கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு கடந்த திங்கட்கிழமை தனது தங்காலை வீட்டில் கையளிக்கப்பட்ட அழைப்பு கடிதம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் என்னை ஜனவரி மாதத்தை சிறையில் போடுவோம் என்று கூறியிருந்தார். அதற்கு தேவையான அழைப்பாகவும் இது இருக்கலாம். இப்போது இருக்கும் பொலிஸ்மா அதிபருக்கு பொலிஸார் எப்படி செயற்படுகின்றனர் என்பது தொடர்பில் தெரியாமல் இருக்கின்றார். எனக்கு அந்த அழைப்பு கடிதம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே நான் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றில் ஆஜராக முடியாது என்பதனை அறிவித்திருந்தேன். இது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலைமையில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு காலை 9.50 மணிக்கு தங்காலையில் உள்ள வீட்டில் கடிதத்தை கையளித்துள்ளனர். பொலிஸ்மா அதிபருக்குக்கூட தங்காலையில் இருந்து கொழும்புக்கு எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. தமது பொலிஸார் என்ன செய்கின்றார் என்றுகூட தெரியாமல் இருக்கும் பொலிஸ்மா அதிபர் எப்படி ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக்கும்பல்களை பிடிக்கப் போகின்றார் என்றும் தெரிவித்தார்.
![]()