விசாரணைக்காக அழைக்கப்படும் போது சட்டத்திலிருந்து தப்பிக்க சிராந்தி முயலக் கூடாது

விசாரணைக்காக அழைக்கப்படும் போது சட்டத்தில் இருந்து தப்பியிருக்காமல் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாராகவும், அரசியலில் இருக்கும் நாமல் ராஜபக்ஷவின் தாய் என்ற ரீதியிலும் விசாரணை பிரிவில் முன்னிலையாகி சமூக பொறுப்புடன் சிராந்தி ராஜபக்ஷ நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், நிதி மோசடிகள் தொடர்பான விசாரணை பிரிவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிரிலிய கணக்கு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அங்கமாக சிராந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் அங்கு வருவதற்கு இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளார். எவருக்கும் நியாயமான காரணம் இருந்தால் இவ்வாறு கால அவகாசம் கோருவதற்கு முடியும். ஆனால் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார், நாட்டின் முதற் பெண்மணியாக இருந்தவர் மற்றும் அரசியலில் இருக்கும் நாமல் ராஜபக்ஷவின் தாய் என்ற ரீதியில் சட்டத்தில் இருந்து தப்பியிருக்காமல் விசாரணை பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு அவருக்கு உள்ளது.
அத்துடன் கால்டன் முன்பள்ளியை அவர் நடத்திச் செல்லதால் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அவரிடம் சட்டத்திற்கு இருக்கும் கௌரவத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
![]()