இலங்கை

வடமராட்சி கிழக்கில் அரசால் அபகரிக்கப்பட்ட காணிகள்; குறித்து எந்தத் தகவலும் இல்லை

வனவளத் திணைக்களம், வன இலாகாப் பாதுகாப்புத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களங்கள் போன்ற திணைக்களங்களால் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

வனவளத் திணைக்களம், வன இலாகாப் பாதுகாப்புத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்துட்பட்ட பகுதிகளில் எவ்வளவு காணிகளைக் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் கையகப்படுத்தி வைத்திருக்கின்றன என வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் இ.முரளிதரனால் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்ட தகவலுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (21) வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலக நிர்வாக அலுவலர் ரி.சிறீதரன் வழங்கிய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல ஏக்கர் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் வன வளத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் போன்ற திணைக்களங்களால் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் சட்ட முரணாகக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றை விடுவிக்குமாறு மக்களால் பல தடவைகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் உட்படப் பல கூட்டங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் இல்லை என வடமராட்சிப் பிரதேச செயலகம் குறிப்பிடப்படுவது வியப்பாகவுள்ளதாக வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் இ.முரளிதரன் அதிர்ச்சியும், விசனமும் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *